கொடுத்த வாக்குறுதிபடி பிரதமரின் ஒவ்வொரு திட்டமும் நாட்டுக்காக மக்களுக்காக மிளிர்கிறது

மித்ரா அமைப்பு தற்போது தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் வழி செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரம் வழங்கினாலும் அதன் செயல்பாடுகள் மீது நிதி அமைச்சு சார்பில் தமது பார்வை தொடர்ந்து இருக்கும் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் நாடு சார்ந்த 214 தனியார் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு மித்ரா உதவித் தொகையாக ஆண்டுக்கு தலா 100 வெள்ளி மட்டுமே வழங்கி வந்துள்ள நிலையில், நடப்பில் அந்த தொகை நூறு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து சுங்கை சிப்புட் தொகுதியில் நடத்திவரும் தனியார் மழலையர் பள்ளிகளின் பெற்றோர்கள் சார்பில் தொகுதி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம் தமது மகிழ்ச்சியைப் புலப்படுத்தினார்.
தமது தொகுதிக்கு உட்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவ்வப்போது வருகையளிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைப்படும் 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மேம்பாடு கழிவறை திட்டம் நிறைவுப் பெற்றுள்ளதை கேசவன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அவர் மேலும் கூறுகையில், மித்ராவை ஒற்றுமை அமைச்சுக்கு மாற்றப்பட்டது குறித்து விஷயம் தெரிந்தவர்கள்கூட விமர்சனம் செய்கின்றனர். கருத்துகள் கூறுவது அவர்களுடைய உரிமை என்பதை மறுக்கவில்லை என்றார் அவர்.
நிதித் துறையில் பெற்றுள்ள அனுபவம்தான் பிரதமர் நிதி அமைச்சுப் பொறுப்பிலும் இருக்கின்றார். அந்த வகையில், கடந்த காலங்களில் மித்ராவில் நடந்த சம்பவங்களால் எம்ஏசிசி விசாரணை வலைக்குள் பலர் சிக்கியுள்ளனர். இன்னமும் அந்த நடவடிக்கையின் தீவிரம் தொடர்ந்துக் கொண்டே உள்ளது. அந்த நிலை தமது தலைமைத்துவத்தில் தோன்றக்கூடாது என்பதில்
பிரதமர் மிகத்தெளிவான முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த சூழ்நிலையில், மித்ராவை எந்த அமைச்சின் பொறுப்பில் செயல்பட
வேண்டும் என்பது அவருடைய அரசியல் ஆளுமைக்கு உட்பட்டுள்ளது.
மக்கள் பணம் மக்களிடமே சேர்ப்பிக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் எந்த சவாலையும் சந்திக்க நாட்டின் 10 வது பிரதமரிடம், மக்களைக் காக்கும் சக்தியாக சத்தியம் குடிக்கொண்டிருக்கிறது. ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு என்பது நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்து வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் மித்ரா நிதி ஒதுக்கீட்டில் சமுதாயம் முழுமையாக நலன் பெறுவது அவசியம். தடம் மாறும்போதுதான் எம்ஏசிசிக்கு வேலை வந்துவிடுகிறது. இனி ஒற்றுமை அரசாங்கத்தின் பார்வையில் மித்ராவின் செயல் வடிவம் என்பது நேர்மறையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என பிரதமரின் சிறப்புகளைக் குறித்து கேசவன் எடுத்துரைத்தார்.