நடிப்பிலும் அரசியலிலும் விவேகம் காட்டிய மகத்தான மனிதர் விஜயகாந்த்!

திரைப்படத் துறையில் தனது விவேகத் திறனால், எண்ணற்ற ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில், முன்னேற்றம் கண்டதோடு, அரசியலிலும் தீவிரம் காட்டி முத்திரை பதித்த புரட்சிக் கலைஞர் என்று புகழாரம் சூட்டப்பட்ட, விஜயகாந்த் தனது  71 வது வயதில் மண்ணுலகிலிருந்து விடை பெற்று, விண்ணுலம் சென்று விட்டார். 

 ஒரு திரைப்பட நடிகராக தன்னை நிலை நாட்டிக் கொண்டு, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் அரசியல் கட்சியைத் துவக்கி, ஏராளமான தொண்டர்களை தன் வசம் ஈர்ப்பதில் வெற்றி கண்டவர் விஜயகாந்த் ஆவார்.      

விஜயராஜ்  என்னும் இயற் பெயரைக் கொண்ட விஜயகாந்த்,  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள,  இராமானுசபுரம் என்னும் சிற்றூரில், 1952 இல் ஆகஸ்டு திங்கள் 25 ஆம் நாளில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். 

சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தனது தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில், விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்து வந்தார்.    1979 ஆம் ஆண்டில் இயக்குநர் எம்.ஏ.காஜா கதை வசனமெழுதி இயக்கிய, ‘இனிக்கும் இளமை’படத்தின் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமான விஜயராஜை, விஜயகாந்த் என்று, காஜா பெயர் மாற்றம் செய்தார்.

 அத்திரைப்படத்தில் ராதிகாவோடு இணைந்து நடித்த விஜயகாந்த், அதே வருடம் ’அகல் விளக்கு’ என்றப் படத்தில் ஷோபாவோடு இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் ஷோபாவோடு இவர் இணைந்துப் பாடுவதாக அமைந்திருந்த “ஏதோ நினைவுகள்” என்றப் பாடல் மிகவும் புகழ் பெற்றது.   1980 இல் ‘நீரோட்டம்’, ‘தூரத்து இடி முழக்கம்’, ’சாமந்திப்பூ’, போன்றப் படங்களிலும், தொடர்ந்து, 1981இல் ‘சிவப்பு மல்லி’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ’நீதி பிழைத்தது’, ‘சாதிக்கொரு நீதி’ முதலியப் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன்வசம் ஈர்ப்பதில் விஜயகாந்த் வெற்றி கண்டார். இவரின் வீரதீர சாகச நடிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அநியாயங்களை தட்டிக் கேட்கும் துணிச்சல்மிக்க இளைஞராகவும், காவல் அதிகாரியாகவும் போராட்டவாதியாகவும் பலப் படங்களில் விஜயகாந்த் நன்கு பரிணமித்தார்.

    1980களில் ’சட்டம் சிரிக்கிறது’, ‘மதுரை சூரன்’, ‘மெட்ராஸ் வாத்தியார்’, ‘வெற்றி’, ‘வேங்கையின் மைந்தன்’, ‘நூறாவது நாள்’, ’நல்ல நாள்’, ‘புதிய தீர்ப்பு’, ’எங்கள் குரல்’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘அன்னைபூமி’, ‘நானே ராஜா நானே மந்திரி’, ’தண்டனை’, ‘ஊமை விழிகள்’, ‘கரிமேடு கருவாயன்’ போன்ற ஏராளமானப் படங்களில் மக்கள் நாயகனாக, விஜயகாந்த் தோன்றினார்.   1990களில் ‘எங்கிட்ட மோதாதே’, ‘சத்ரியன்’, ‘தாய்மொழி’, ‘புலன் விசாரணை’, ‘ஏழை ஜாதி’, ‘ராஜதுரை’, ‘பெரிய மருது’, ‘கருப்பு நிலா’, ‘திருமூர்த்தி’, ‘அலெக்ஸாண்டர்’, ‘தமிழ்ச்செல்வன்’, ‘தர்மச்சக்கரம்’, ‘தர்மா’, ‘கள்ளழகர்’போன்ற பலப் படங்களிலும் திறம்பட நடித்து, ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களில் விஜயகாந்த் இடம் பெற்றார். 

2000 ஆம் ஆண்டுகளிலும் இவரது நடிப்பில் பல வெற்றிப் படங்கள், இவருக்கு புகழாரம் சூட்டின.    2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில், ‘சபரி’, ‘அரசாங்கம்’, ‘மரியாதை’, ‘எங்கள் ஆசான்’ முதலியப் படங்களிலும் மயிர் கூச்சரியும் சண்டைக் காட்சிகளில் நாயகனாக விஜயகாந்த் நடித்தார். 

பெரும்பாலும் காவல் அதிகாரியாக இவர் பலப் படங்களில் தோன்றி, அநீதிகளை எதிர்க்கும் வல்லவராக நடித்து, அநேக ரசிகர்களின் அபிமான நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் வெற்றி கண்டார். கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் ஏறத்தாழ எழெட்டுப் படங்களில் விஜயகாந்த் நாயகனாக நடித்துள்ளார்.   

விஜயகாந்த் நடிப்பில் ‘சின்னக்கவுண்டர்’, ‘வைதேகி  காத்திருந்தாள்’, ‘கண்ணுபடப் போகுதய்யா’போன்றப் படங்கள் வசூலில் சாதனை படைத்தன. விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில்  பிரேமலதா என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப்  போட்டியிட்டனர்.

 அவர்களில் பலர் வெற்றி பெற்றனர். இச்சம்பவம் விஜயகாந்திற்கு ஓர் உந்துதலை ஏற்படுத்தியதால், தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங் கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.    இந்த உந்துதல் விஸ்வரூபம் எடுத்ததன் பலனாக, 2005 ஆம்  ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்றப் பெயரில், புதிய அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். அவரே அக்கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம்  தொகுதியிலிருந்து வெற்றிப் பெற்று, தமிழக சட்டப் பேரவை  உறுப்பினராகப் பணியாற்றி்னார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இல், இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி  பெற்றார். 

இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி  கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டார்.   

விஜயகாந்த் தாமே எழுதி இயக்கி, ‘விருதகிரி’ என்றப் படத்தில் 2010 ஆம் ஆண்டில் கடைசியாக நடித்திருந்தார். இவரது மகன் சண்முகப்பாண்டியன், ’சகாப்தம்’, ’தமிழன் என்று சொல்’ ஆகியப் படங்களில் தனது தந்தை வழியில் நாயகனாக நடித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.