நமக்குள் ஒற்றுமை இருந்தால் எல்லாரும் பறந்தோடி வருவார்கள்!

  • ஓம்ஸ் பா.தியாகராஜன்

ஜொகூர், குளுவாங் கம்போங் ம.இ.காவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ ஜெய சுப்ரமணியர் ஆலய நிர்மாணிப்புப் பணிக்கான நிதி திரட்டும்  நிகழ்வு நேற்று முன்தினம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

ஆடல், பாடல் விருந்துபசரிப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்தார்.

முன்னதாக ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஓம்ஸ் பா.தியாகராஜனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் அவ்வட்டாரத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் “கம்போங் ம.இ.கா கிராமத்தில் ஒரு காலத்தில் 3 கிராமத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அதே வேளை 86 சீன சமுகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது இந்தியர்களே இங்கே அதிகமாக இருப்பதும், கம்போங் ம.இ.கா என்ற கிராமத்தை அடையாளமாய் பெற்றிருப்பதோடு, பிரமாண்டமான ஓர் ஆலயத்தையும் எழுப்பியிருப்பது பாராட்டுக்குரியது” என்று கூறினார்.

“இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக முந்தைய தலைவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு எனது பாராட்டுகள்… அவர்கள் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. அதேபோல் இளைஞர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். அழகான இடத்தில்  அழகன் முருகன் கோயில். அதற்கான இந்த நிதி திரட்டும் நிகழ்வுக்கு ஓம்ஸ் அறவாரியம் நிச்சயம்  கை கொடுக்கும். அதற்குரிய முறையான விண்ணப்பத்தை விரைந்து ஆலய நிர்வாகம் சமர்பித்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டதோடு, முதற் கட்டமாக தனது சொந்த நிதியாக 50 ஆயிரம் வெள்ளியை நன்கொடையாக அறிவித்து அதனை மேடையில் வழங்கினார்.

“பத்துமலை போல் பெரிய முருகன் சிலை வைக்கும் எண்ணம் இருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டார்கள். ஏன் பெரிய சிலை? உலகத்திலேயே மிகச்சிறிய சிலை என்று வைக்கக் கூடாதா? என அவர் கேள்வி எழுப்பினார். போட்டி மனப்பான்மையில் ஆலய செயல்பாடுகள் இருக்கக்கூடாது…. என வலியுறுத்திய அவர், இந்த விஷயத்தில் உங்கள் தனித்துவத்தைக் காட்டுங்கள் என்றார். இங்கே முழுக்க முழுக்க மக்களின் ஆதரவில் நிதி திரட்டியிருப்பது கூடுதல் சந்தோசம். மக்களே முக்கால்வாசி நிதி வழங்கியுள்ளார்கள். அதற்குப் பாராட்டுகள்.

மேலும், அரசிடம் இருந்து இதுவரை எவ்வித உதவியும் வரவில்லை என்றும், அதற்காக முறையாக விண்ணப்பித்துள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அரசு நிச்சயம் கொடுக்கும். நமக்குள் ஒற்றுமை இருந்தால் நிச்சயம் அரசாங்கம் சார்பில் எல்லாரும் பறந்தோடி வருவார்கள். நாம் சிதறிப்போயிருக்கிறோம். எல்லோரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும்” என ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்தினார்!