ஒரு பனிப்பாறையின் நுனிதான் ஷிவானி

அண்மையில் மலேசிய கினி ஊடகத்தில் 10 வயது ஷிவானி என்ற மாணவியின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது செனாவாங் தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளி மாணவியால் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் இந்த மாணவியால் நேரடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இதில் ஷிவானி குறிப்பிட்ட பள்ளியில் 1 ஆம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையில் கல்வி பயின்றுள்ளார். ஆனால், தற்போது வருகின்ற ஆண்டான 2024 ஆம் ஆண்டில் அவள் நான்காம் ஆண்டில் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை என்று தனது ஆசிரியர் குறிப்பிட்டதாக அந்தக் கடிதம் கூறுகின்றது. எனவே, தனது கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்க பிரதமர் தலையிட வேண்டும் என்ற எண்ணத்தையே இந்த கடிதம் பிரதிபலிக்கின்றது.

ஷிவானி குறித்து தமிழ் மலரில் வெளியிட்ட செய்தி

இந்த ஆவணப் பிரச்சினை என்பது மலேசிய இந்திய சமுதாயத்தின் மிகப் பெரிய பூதாகரமான பிரச்சினையாகும். ஆனால், இது குறித்த அக்கறை இந்த சமுதாயத்திற்கு இருக்கின்றதா என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது என்பது உண்மையாகும். அதிலும், இந்த சமுதாயத்தின் தலைவர்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற எந்தவொரு திட்டத்தையும் இதுநாள்வரையில் தீவிரமாக அமல்படுத்தவில்லை என்றே கூறலாம். இது ஏதோ சில பருவ காலங்களில் வரும் விழாக்களுக்காக தயாராவது போல “மெகா டஃப்தார்” என்ற பெயரில் இரண்டு முறை நாடு தழுவிய நிலையில் ஆவணப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்களை ஓரிரு இடங்களுக்கு வரவழைத்து தேசிய பதிவு இலாகா அதிகாரிகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பதிவுகளின் தொடர் முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த ”மெகா ட்ஃப்தார்” பதிவின் வழி எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்பது பற்றி பகிங்கரமாக அறிவிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை.


இதைத் தவிர்த்து, உண்மையிலே இந்த ஆவணப் பிரச்சினைக்கு நிச்சயமான தீர்வுகள் கிடைக்க அன்றைய அமைச்சர் தான்ஸ்ரீ ச. சுப்பிரமணியம் தலைமையில் அமைந்த அமைச்சரவை நிலையிலான ”எஸ்ஐடிஎப்” என்ற குழுவான இந்திய சமுதாயத்திற்கான சிறப்பு அமலாக்கப் பிரிவின் வழி வெற்றிகரமாக வழி நடத்தப்பட்டது. இந்த சிறப்பு அமலாக்கப் பிரிவு நாடு முழுவதும் முகாம்களை நடத்தி தேசிய பதிவு இலாகா அதிகாரிகளின் உதவியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்தது. அது மட்டுமல்லாது அந்த விண்ணப்பங்களை தொடர்ச்சியாக கண்காணித்து பலரும் குடியுரிமை பெற வழிவகுக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 6,000 பேர் தங்களுடைய விண்ணப்பங்களில் வெற்றி பெற்றனர். மேலும், இதில் அமைச்சரின் உதவியுடன் பெரும்பாலானவர்களுக்கான பதிவுக் கட்டணங்களும் சிறப்பு அமலாக்கப் பிரிவினரால் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அது மட்டுமல்லாது, பல பள்ளிக் குழந்தைகள் ஆவணப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த போது, கல்வி இலாகா அதிகாரிகளுடன் கலந்து பேசி அக்குழந்தைகளுக்காக “லெவி” கட்டணங்கள் கட்டி அக்குழந்தைகளின் கல்வியைத் தொடர சிறப்பு அமலாக்கப் பிரிவு ஆவன செய்தது என்பது உண்மையாகும். ஆனால், கல்வி அமைச்சுடன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண முற்பட்டபோது சிறப்பு அமலாக்கப் பிரிவு கலைக்கப்பட்டதால் அந்த முயற்சி நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்தாக கலைந்து போனது.என்பதை வேதனையுடன் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. மேலும், சிறப்பு அமலாக்கப் பிரிவினர் நாடு முழுவதும் இருந்த பல சிறுவர் பராமரிப்பு இல்லங்களுக்கு வருகை புரிந்து அங்கிருந்த பிள்ளைகளுக்கு ஆவணங்கள் கிடைக்க வழி செய்யும் வகையில் அந்த இல்லங்களே அந்தப் பிள்ளைகளை தத்து எடுக்க தேசிய பதிவிலாகாவில் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டது என்பதும் உண்மையாகும். ஆனால், இந்த சிறப்பு அமலாக்கப் பிரிவு கலைக்கப்பட்டதால் இந்த தத்து எடுக்கும் முயற்சிக்கான பதிவும் ஊமையன் கண்ட கனவாகப் போனது என்றுதான் கூற வேண்டும்.

ஷிவானி எழுதிய கடிதம்


”எஸ்ஐடிஎப்” என்ற சிறப்பு அமலாக்கப் பிரிவானது பிரதமர் துறையின் கீழ் மானியம் ஏதுவும் இல்லாமல் நிர்வாக செலவினங்களின் அடிப்படையில் மட்டுமே நிர்வகிக்கப்பட்டது. மேலும், இந்த பிரிவு அமைச்சரவை நிலையிலானது மற்றும் பிரதமர் துறையின் கீழ் இருந்ததாலும் ஏனைய அமைச்சுகளும் இலாகாகளும் மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் ஆதரவினை வழங்கி வந்தனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், இந்த பிரிவினர் கலைக்கப்பட்டு ”மித்ரா” என்ற அமைப்பு மானிய ஒதுக்கீட்டுடன் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அமல்படுத்தியது. மேலும், இந்த அமைப்பனது இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் அல்லது சவால்கள் முதலானவைகளை கவனிக்கும் நோக்கத்தினை கொண்டிருக்கவில்லை. ஆனால், இந்திய சமுதாயத்தின் பொருளாதார ஏற்றத்திற்கு உதவி செய்வதை பிரதான நோக்கங்களாக கொண்டிருந்தது என்பதே உண்மையாகும். இன்னும், மித்ரா அமைப்பானது அரசு சாரா இயக்கங்களின் திட்டங்களுக்கு நிதி அளிப்பதை முதன்மையாகக் கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிவர். எனவேதான், இந்திய சமுதாயத்தின் பிரச்சினகள் மற்றும் சவால்கள் யாவும் ஒரேடியாக துடைப்பத்தால் கூட்டப்பட்டு கம்பளத்திற்கு அடியில் மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பப்படும் பொழுது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

ஆனால், உண்மையில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் ஆவணப் பிரச்சினைகள் தனிமனிதனால் தீர்க்கப்பட முடியாத ஒன்று என்பதை பலரும் உணருவதில்லை. இதே நிலை இன்னும் தொடருமானால், இந்திய சமுதாயம் இன்னும் பல நிலைகளில் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதும் உண்மையாகும். இந்த 2023 இல் ஷிவானி என்ற மாணவி எதிர்நோக்கும் பிரச்சினை சிறியதுதான் என்று இந்த சமுதாயம் எடுத்துக் கொண்டால் இது ஒரு பூதாகரமான பிரச்சினையாக விரைவில் வெடிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது வெளியில் தெரியும் ஒரு பனிப்பாறையின் நுனியாகத் தென்படுகிறது, ஆனால், மிகப் பெரிய பனிப் பாறையானது கடலினுள் மறைந்துள்ளதை மறக்கக் கூடாது. அதாவது, ஷிவானி மூலம் வெளிப்பட்டுள்ளது ஒரு மறைவான பனிப்பாறை போன்ற மிகப் பெரிய பிரச்சினையின் ஒரு நுனி மட்டுமே என்பதை சமுதாயம் உணர வேண்டியது அவசியமாகும். இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.


ஷிவானியின் பிரச்சினையில் அவருடைய தந்தையார் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதாவது, அவர் தனது திருமணத்தை பதிவு செய்யவில்லை. மேலும் சில காலங்களிலேயே அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்து விட்டார். இதனால், தனது மனைவியின் பெயர் மட்டுமே ஷிவானியின் பிறப்புப் பத்திரத்தில் உள்ளது. மாறாக, திருமணத்தை பதிவு செய்யாததால் தனது பெயரும் அந்தப் பத்திரத்தில் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது இந்த சமுதாயத்தில் நடந்து வரும் மாபெரும் தவறாகும். இம்மாதிரியாக சட்டத்திற்குட்பட்டு காரியங்களை செய்யாவிட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்தான் ஏற்படும். இதை சமுதாயம் உணர வேண்டும். இன்னும் சொல்லப் போனால் குடும்பப் பிரச்சினைகளினால் இவ்வாறு சிதைந்துவிடுகின்ற குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை களைவதற்கு சில சிறப்பு ஷரத்துகள் வரையறுக்கப்பட வேண்டும். ஆனால், இவைகளை முன்னெடுத்து சொல்லி அரசாங்க அமைச்சுகளிடம் பேச்சுகள் நடத்த அரசாங்கத்தின் அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு கட்டாயம் இருப்பது அவசியமாகும்.


எனவேதான், ”எஸ்ஐடிஎப்” போன்ற சிறப்பு அமலாக்கப் பிரிவு ஒன்று இந்திய சமுதாயத்திற்கு தேவையாக உள்ளது. அதற்கு சாத்தியமில்லை என்று சொன்னால், “மித்ரா” என்ற அமைப்பின் இன்றைய முக்கிய பொறுப்புகளையும் நோக்கங்களையும் சற்று விரிவுபடுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள், பாலர் பள்ளி, சிறுநீரக சிகிச்சை, மடிக் கணினிகள் வழங்குதல் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மானியங்கள் என்று இல்லாமல் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளை ஆராய வேண்டும். இன்று அரசாங்க நிலையிலே தீர்வு காண இந்திய சமுதாயத்திற்கு ஆவணப் பிரச்சினைகள், அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகள், மேற்கல்வியில் நிதியுதவிகள் மற்றும் வாய்ப்புகள், சொந்த வீட்டுடைமை, சமூக நலன்கள், இளைஞர்கள் வாழ்க்கை முன்னேற்றம் போன்றவை உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினைகள் பற்றிய சிக்கல் தீர்வுகளை “மித்ரா” அடையாளம் கண்டு அரசாங்க இலாகாக்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது அவசியமாகும்.

இல்லையென்றால், இந்த மாதிரியான பிரச்சினைகள் இந்திய சமுதாயத்தை தொடர்ந்து வரும் துன்பங்களாகவே இருக்கும் என்பது உண்மையாகும். மேலும், இந்த சமுதாயம் அஜாக்கிரதையாக இருக்குமானால் வெளிநாட்டிலிருந்து இங்கு குடியேறியுள்ள சமூகம் இந்திய சமுதாயத்தை விட முன்னேற்றகரமான சமுதயமாக மாறிவிடும் என்பதும் உண்மையாகிவிடும் என்பதை நாம் அறிய வேண்டும். இதற்கான அறிகுறிகள் அவ்வப்போது நாளிதழ்கள் மூலம் அறிகிறோம். உள்ளூர் வியாபாரிகளுக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வியாபாரம் செய்பவர்களுக்கும் பிரச்சினைகள் எழுவது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், உள்நாட்டு இந்திய சமுதாயத்தின் வியாபாரிகள் இந்த வெளிநாட்டினருடன் போட்டியிட முடியாமல் தவிக்கின்றனர் என்பதும் உண்மையாகும்.


எனவே, ஷிவானியின் இந்தப் பிரச்சினையை முன்னிறுத்தி “மித்ரா” தனது இலக்கு கொள்கைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கின்றது என்பது வெள்ளிடை மலையாகும்.