ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன

தோக்கியோ, ஜன. 2-
ஜப்பானின் மத்திய பகுதியை 7.6ஆற்றல் கொண்ட பலத்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ஒரு மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் கரையோரத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளன. அதைவிட பெரிய அலைகள் அங்கு தாக்கலாம் என்று அரசாங்க ஒளிரப்புக் கழகமான என்எச்கே குறிப்பிட்டது,பலத்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மாவட்டத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.அருகில் உள்ள தலைநகர் தோக்கியோவில் கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன என்றும் அதில் கட்டடங்கள் குலுங்கின என்றும் அந்த ஒளிபரப்புக் கழகம் தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.10மணிக்கு அந்நிலநடுக்கம் உலுக்கியது.
இஷிகாவாவின் வஜிமா நகரிலிருந்து வடகிழக்காக முப்பது கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அது மையம் கொண்டிருந்தது, நிலநடுக்கம் நிகழ்ந்த இரண்டு நிமிடங்கள் கடற்கரையை நோக்கி 1.2 மீட்டர் ( சுமார் 4 அடிகள்)
உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கின.

ஐந்து மீட்டர் ( சுமார் 15 அடிகள்) உயரத்திற்கு பேரலைகள் எழும்பலாம் என்றும் பாதுகாப்பைக் கருதி கரையோர மக்கள் உடனடியாக மேட்டுப்பாங்கான இடத்திற்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அல்லது அருகில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடியில் தஞ்சம்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயிருடற்சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.

இஷிகாவா மற்றும் தோயாமா மாவட்டங்களில் முப்பத்தாறாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இஷிகாவா, நீகாத்தா, தோயாமா ஆகிய கரையோர மாவட்டங்களை பலத்த சுனாமி தாக்கலாம் என்று முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜப்பான் கடலை ஒட்டி அமைந்துள்ள ஐந்து அணுஉலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அங்கு அசாதாரணமான நிகழ்வுகள் எதுவும் தென்படவில்லை என்று அந்நாட்டின் அணு முறைமை வாரியம் குறிப்பிட்டது.

இதனிடையே, கரையோரப் பகுதிகளில் வசித்துவரும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி பிரதமர் ஃபூமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளார். அப்பகுதிகள் எந்நேரத்திலும் சுனாமி தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று அவர் சொன்னார்.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதியன்று நிகழ்ந்த பலத்த நிலநடுக்கத்திலும் சுனாமி தாக்குதலிலும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு அணுஉலைகளும் பாதிக்கப்பட்டன. ஏராளமான கட்டடங்களும் தரைமட்டமாகின.