நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்


நிபோங் தெபால், ஜன. 2-
தென் செபராங் பிறை, நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலயத்தின் சீரமைப்புத் தேவைகளுக்கு,ஆலய நிர்வாகம் முறையாக விண்ணப்பம் செய்தால் அதற்கான உதவிகளை செய்துக் கொடுக்க தயாராக இருப்பதாக நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பட்லினா சிடேக் கூறினார்.
நேற்று முன்தினம் தேவாலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அவர், தேவாலயத்தின் கூரைகளில் ஏற்பட்டுள்ள பழுது, அருகிலுள்ள கல்லறை, திடலுக்கு தேவையான மண் போன்ற பிரச்சனைகள் குறித்து பங்கு குருவானர் அருள்நாதன் ஜோசப், நாடாளுமன்ற உறுப்பினரிடம் விளக்கினார்.


தேவாலயத்தின் உட்புறம், வளாகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட கல்வியமைச்சருமான அவர், தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்,இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு மதானி அரசாங்கத்தின் மூலம் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.


அதற்கு தேவாலய நிர்வாகம் முறையாக விண்ணப்பம் செய்தால் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக இருக்குமென பங்குத் தலைவர் சகோதரர் பெர்னர்ட் அந்தோணியை அவர் கேட்டுக் கொண்டார்.ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, அமைச்சரின் சிறப்பு உதவியாளர் தியாகராஜ் சங்கரநாராயணன் ஏற்பாட்டில் வருகை புரிந்த அமைச்சருக்கு தேவாலய நிர்வாகத்தின் சார்பில் குருவானர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


அமைச்சரின் இந்த வருகையில், நிபோங் தெபால் தொகுதி பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி நூர் ஷகிலா, செயலவை உறுப்பினர் தேன்மதி பரசுராமன், நாடாளுமன்ற சேவை மையத்தின் அதிகாரி சந்திரசேகரன் உட்பட மேலும் சிலரும் உடனிருந்தனர்.