பிரிக்பீல்ட்ஸில் 174 இந்தியப் பிரஜைகள் உட்பட அந்நிய நாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜன. 2-
தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நேற்று புத்தாண்டு அன்று குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளக் குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஜாலான் தம்பி அப்துல்லாவில் உள்ள 30 இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் 224 அதிகாரிகளும் பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் 1.00 மணியளவில் ஓப்ராசி சாபு எனும் பெயரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் ஜெஃரி எம்போக் தாஹா கூறினார்.
30 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது 370 வெளிநாட்டினர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்நடவடிக்கையின் போது 174 இந்தியப் பிரஜைகளும் 36 பாகிஸ்தானியர்களும் 21 இலங்கையர்களும் 30 இந்தோனேசியர்களும் பிடிபட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்கள் சிலாங்கூர் செமினியில் உள்ள குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.இந்த சோதனை நடவடிக்கை தொடரும் என்று ஜெஃரி கூறினார்.