ஒற்றுமையே நமது பலம் -ஓம்ஸ் பா.தியாகராஜன்

லாவண்யா ரவிச்சந்திரன்
இஷாந்தினி தமிழரசன்

படங்கள் : எம்.முருகன்

கோலாலம்பூர், ஜன.1 –
மலேசிய இந்தியர்களிடையே ஒற்றுமை இருந்தால் தான் நமது பலம் வலிமையடையும். இல்லாவிடில் நமது இலக்குகள் வெற்றி பெற முடியாது என்று ஓம்ஸ் அறாவரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.சிலாங்கூர் – கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் நடத்திய 2023ஆம் ஆண்டின் 7ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் – வாசகர் மாநாடு டான் ஸ்ரீ கே.ஆர் சோமா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.


இந்த மாநாட்டில் உரையற்றிய ஓம்ஸ் தியாகராஜன் மேலும் கூறியதாவது,
இந்த மாநாடு வெற்றிகரமாக அமைந்திருப்பது கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். நாடு தழுவிய நிலையிலிருந்து இந்த மாநாட்டுக்கு வாசகர், எழுத்தாளர்கள் கலந்து கொண்டிருப்பது உண்மையிலே பாராட்டக்குரியதாகும்.
ஒவ்வொரு வாசகர் இயக்கங்களும் ஓர் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். சிலாங்கூர் கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் சொந்த கட்டடம் பெறுவதற்குரிய ஏற்பாடு செய்தால் அதற்குரிய ஆதரவை நான் வழங்கத் தயாராக இருக்கிறேன்.

இந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய இயக்கத் தலைவர் மதியழகன் பேசும் போது கோரிக்கைகள் பலவற்றை வைத்துள்ளார். அந்தக் கோரிக்கைகளை நான் கவனத்தில் எடுத்து கொள்வேன்.
இது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு நம்மிடையே ஒற்றுமை இருக்க வேண்டும்.பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடன் பேசிக் கொண்டிருக்கும் போது இந்திய சமுதாயத்தில் பிளவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஒற்றுமை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று கூறியிருந்ததை ஓம்ஸ் தியாகராஜன் சுட்டிக் காட்டினார்.

தமிழ் மொழி வளர்வதற்கும் மேம்படுவதற்கும் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்பதற்கு முக்கியமாக இருக்கும் வேளையில், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பாடத்தைப் போதிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு, தமிழுக்கும் மொழிக்கும் பெருமை சேர்ப்பதற்கு இவ்வாறான இயக்கங்கள் பெரிதும் பங்காற்றுகின்றன என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது திறப்புரையில் கூறினார்.

இந்த மாநாட்டில் இயக்கத் தலைவர் ந.மதியழகன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஜோசப் செபஸ்டியன் இருவரும் வரவேற்புரை தலைமையுரையாற்றினர்.
இம்மாநாட்டில் மாநில ரீதியான வாசகர் இயக்கத்தின் தலைவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இதில் கெடா மாநில எழுத்தாளர் சங்க தலைவர் த.சச்சிதானந்தம், கார்ட்டூனிஸ்ட் கூட்டாமணி, போர்ட்டிக்சன் எஸ் மனோகரன், ஈப்போ வே.மு.தியாகராஜன், நெகிரி செம்பிலான் நீலாய் கோவி.தமிழ்ச்செல்வி, பூச்சோங் ஜி.குணசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு செய்யப்பட்டனர்.
மேலும், தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர் விலாயா மணியம், பத்திரிகையாளர் ராசு சின்னப்பன், கலைஞர் ந.வளர்மதி, எழுத்தாளர் சரஸ்வதி வீரபுத்திரன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.

வாசகர் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான அம்பாங் சுப்ரா சிறப்பிக்கப்பட்டார். இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாக ஏ.எஸ். பிரான்சிஸ் எழுதிய 37 நூல்கள் மலேசிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று இம்மாநாட்டின் போது சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழை கின்னஸ் சாதனை புத்தக அதிகாரியும் ஓம்ஸ் தியாகராஜனும் ஒரு சேர வழங்கினர்.

எழுத்தாளரும் கவிஞருமான ஜாசின் ஏ.தேவராஜன் பல குரலில் பேசி பாராட்டைப் பெற்றார். கவிஞர்கள் ஏ. ஆர். சுப்ரமணியம், சீராகி இருவரும் கவிதை பாடினர்.
இந்த மாநாட்டில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞானஸைமன், தென்றல், வானம்பாடி ஆசிரியர் வித்தியாசாகர், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், கூட்டுறவு இதழ் பொறுப்பாசிரியர் ராமதாஸ் மனோகரன் உள்ளிட்ட வாசகர்கள் எழுத்தாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.