மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து எது?

கோலாலம்பூர், டிச. 31-
அண்மையில், பினாங்கில் நடந்த தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால் பலர் குரல் எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரும் மன்னிப்புக் கோரினர்.
இவ்வாறு நமது உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற நாம் அதை சரிவர செய்கின்றோமா என்பதுதான் கேள்வி.


இன்று பலர் எழுப்புகின்ற கேள்வி என்னவென்றால் எது நமது மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து?
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமான பாடல்கள் தமிழ் வாழ்த்தாக இசைக்கப்படுவது ஏன்?


‘காப்பியங்களை ஈன்றவளே (எழுத்தாளர் சங்கப் பாடல்)’, “ நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் (தமிழ்நாட்டு பாடல்)‘, தாய் கொடுத்த பாலில் கலந்து (11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு)’, ஆகிய பாடல்கள் தமிழ் வாழ்த்தாக இசைக்கப்படுகிறது.


நாட்டிற்கு ஒரு தேசியப் பாடல் இருப்பதுபோல் நம் தமிழுக்கும் ஒரு தமிழ் வாழ்த்துதானே இருக்க வேண்டும்?இதற்கு யார் தீர்வு காண்பது? இவ்வாறு அனைத்தையும் தமிழ் வாழ்த்தாக இசைத்துக் கொண்டு வந்தால் நமக்கென்ற ஒரு வரைமுறை நம்மிடையே இல்லாமல் போய்விடும் என்பது திண்ணம்.
அனைத்திலும் சட்டம் கோருகின்ற நாம், நமது தமிழ் வாழ்த்து எது என்பதிலும் தெளிவு கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வெவ்வேறு தமிழ் வாழ்த்தை இசைப்பதும் நம்மிடையே புரிந்துணர்வு எண்ணமும் நிலைப்பாட்டுத் தன்மையும் இல்லை என்பதை வெளிக்கொணருகின்றது.