“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜன. 3-
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரை பெனாசிர் பூட்டோ மற்றும் மேகாவதி சுகர்னோபுத்ரி ஆகியோரோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் அக்கட்சியின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், வரும் பதினாறாவது பொதுத்தேர்தலை நூருல் இஸ்ஸா தலைமையில் பிகேஆர் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வாரின் புதல்வி நூருல் இஸ்ஸா, ஆற்றலும் அனுபவமும் ஒருங்கே அமைந்தவர் என்று குறிப்பிட்டார்.நூருல் இஸ்ஸா மக்களை வசீகரிக்கக்கூடியவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் மற்றும் இந்தோனேசிய முன்னாள் அதிபர் மேகாவதி ஆகியோர் போன்று அவர் தலைமைத்துவத் தகுதிபாடுகளைக் கொண்டவர் என்று தமது முகநூல் பக்கத்தில் ஹசான் கரீம் குறிப்பிட்டுள்ளார்.


கடந்தாண்டு நடைபெற்ற தேசிய நிலையிலான தேர்தலில் பிகேஆர் பதினெட்டு நாடாளுமன்றத் தொகுதிகளை இழந்தது. அவற்றில் நூருல் இஸ்ஸா போட்டியிட் பெர்மாத்தாங் பாவ் தொகுதியும் அடங்கும். பதினான்காவது பொதுத்தேர்தலில் அக்கட்சி 49 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள பிகேஆர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தவறிவிட்டது.அண்மைய தேர்தல்களில் பிகேஆர் அடைந்துள்ள பின்னடைவைப் பார்க்கும்போது அடுத்த பொதுத்தேர்தலுக்குள் அக்கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு ஆக்ககரமான ஒரு வியூகம் தேவைப்படுகிறது. இதனைச் செய்யத் தவறினால், பிகேஆர் தற்போது தன்வசம் வைத்திருக்கும் ஐம்பது விழுக்காட்டு இடங்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால், 15 இடங்கள் மட்டுமே அதனிடம் எஞ்சியிருக்கும் என்றார் ஹசான் கரீம்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி, அக்கட்சியின் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் ஆகியோர் தங்களின் சொந்த மாநிலங்களான முறையே திரெங்கானுவிலும் கிளந்தானிலும் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.