“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

புத்ராஜெயா, ஜன. 3 –
ஐக்கிய அரபு சிற்றரசில் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வரும், ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்திலான “துபாய் நகர்வு” திட்டம், அரசாங்கத்திற்குத் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கின்றார்.

அந்த “துபாய் நகர்வு” திட்டம் தொடர்பிலான சந்திப்புக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சில அரசாங்கப் பிரதிதிகளுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

“துபாய் நகர்வு” ஒற்றுமை அரசாங்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் நாட்டை மேம்படுத்துவதிலும் மக்களை கவனித்துக் கொள்வதிலுமே தாம் கவனம் செலுத்த விருப்பதாகவும் அன்வார் கூறியுள்ளார்.

“இந்த “துபாய் நகர்வு” குறித்த செய்தியை நான் படித்திருக்கின்றேன். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எங்களின் கடமை மீது நாங்கள் கவனம் செலுத்துவோம்”.

“என்னைப் பொறுத்த வரையில், அது ஒற்றுமை அரசாங்கத்தைப் பாதிக்கவில்லை. முக்கியமானது என்னவென்றால், மக்களுக்காக நாங்கள் ஒரு முக்கியமான திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கி இருக்கின்றோம்” என்று, புத்ராஜெயாவில் நேற்று மத்திய தரவு தளம் அல்லது “பாடு”வைத் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு சிற்றரசுக்கான தங்களின் அண்மையை பயணத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சில அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து, “துபாய் நகர்வு” திட்டம் தொடர்பிலான ஆருடங்கள் தற்போது நாட்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.

ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான பணியை “ஏஜெண்டுகள்” அல்லது “தரகர்கள்” மத்தியில் பகிர்ந்தளிப்பதற்காக அச்சந்திப்புக் கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

அச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய அரபு சிற்றரசில் தரையிறங்குவதற்கு முன்னரே “துபாய் நகர்வு” திட்டம் குறித்து தமக்குத் தெரியும் என்று, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி முன்னதாக நேற்று தெரிவித்திருந்தார்.

“ஐக்கிய அரபு சிற்றரசுக்கு குறிப்பிட்ட சில தனி நபர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது அது குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று, செய்தியாளர்கள் கூட்டமொன்றில் ஸாஹிட் கூறியிருந்தார்.

எனினும், தாம் குறிப்பிடும் அந்த தனிநபர்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.