ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளப்படும் எந்த நகர்வும் நடக்காது

பெட்டாலிங் ஜெயா, ஜன. 5-
நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் எந்தவொரு நகர்வும் ஒரு போதும் நடக்காது என பிரதமர் இலாகா துணை அமைச்சர் (சட்டம் மற்றும் துறை சார் சீர்திருத்தம்) எம். குலசேகரன் கூறினார்.தற்போது நடப்பு அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் துபாய் நகர்வு சதித் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மிக வலிமையுடன் இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர்கள் மறந்துவிட்டனர் என அவர் சுட்டிக் காட்டினார்.நடப்பு அரசாங்கத்தை அதிகமான எம்பிக்கள் ஆதரித்து வருவதால் இந்த அரசாங்கத்தை எளிதாக கவிழ்க்க முடியாது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நினைவுறுத்தினார்.


பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஷெரட்டன் நகர்வினால் கவிழ்க்கப்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை.ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த துபாய் நகர்வு ஒரு போதும் பலிக்காது என முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.
நடப்பு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி அதிகமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு அரசாங்கம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.எதிர்க்கட்சித் தலைவர்கள் பதவி மோகத்தால் இதுபோன்ற சதித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.மற்றொரு அரசாங்க மாற்றத்தை இந்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நன்கு தெரியும் என குலா குறிப்பிட்டார்.