அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பொறுப்பற்றதனம்
சிரம்பான், ஜன. 5-
குறிப்பிட்ட சில தரப்பினர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வது முற்றிலும் பொறுப்பற்றதனமாகும். ஆனாலும், அந்த விவகாரத்தில் தனது முழுகவனத்தையும் செலுத்தி நேரத்தை வீணடிக்க ஒற்றுமை அரசாங்கம் விரும்பவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று தெரிவித்தார்.
அரசாங்கத்தைக் குறைகூறி கொண்டிருப்பவர்கள் குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்தவர்கள், “துபாய் நகர்வு”, “அலோர்ஸ்டார் நகர்வு” அல்லது “சௌக்கிட் நகர்வு”போன்ற பெயர்களில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், அதில் கவனம் செலுத்த அரசாங்கம் விரும்பவில்லை. ஆனால், “இலக்கவியல் நகர்வு” மீதுதான் நாங்கள் ஆர்வம் காட்டி வருகிறோம் என்றார் அவர்.
இலக்கவியல் பணிகள்தான் அரசாங்கத்திற்கு முக்கியம். சாலைப் போக்குவரத்துத்துறையின் வாயிலாக போக்குவரத்து அமைச்சில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, மக்களுக்கு பலனளிக்கும் வகையிலான கூடுதல் ஆன்லைன் சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சிரம்பானில் செயிண்ட் பவுல் தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் லோக் கூறினார்.
அது தவிர, மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “பாடு” (மத்திய தரவுதள மையம்) எனும் ஒருங்கிணைந்த முறையினால் அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் ஆக்ககரமாக செயல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிக அளவில் நன்மையடைவார்கள் என்றார்.
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் கோடிக்காட்டியிருப்பது குறித்து கருத்துரைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பது குறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அண்மையில் கலந்தலோசித்தனர் என்று கூறப்படுகிறது. அது “துபாய் நகர்வு” என அழைக்கப்படுகிறது. ஆனால், அது குறித்து கருத்துரைக்க சனுசி மறுத்து விட்டார். ஆயினும், கோலாலம்பூரிலும் (சௌக்கிட் நகர்வு) கெடாவிலும் ( அலோர்ஸ்டார் நகர்வு) அத்தகைய அப்பேச்சுவார்த்தை நடைபெறும் சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை. அதே வேளையில், தற்போதைய ஒற்றுமை அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யாது என்றும் சனுசி சொன்னார்.
இதனிடையே, மற்றொரு விவகாரத்தைத் தொட்டுப் பேசிய லோக், போர்ட்டிக்சனில் சிறிய துறைமுகமொன்று அமைக்கப்படவிருப்பதாகத் தெரிவித்தார். அதன் கட்டுமானம் போன்ற இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.