ஜொகூர் ஸ்ரீ காடிங் தோட்டத் தேசிய வகை தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சர் வருகை
ஜொகூர், ஜன.5-
ஜொகூர் ஸ்ரீ காடிங் தேசிய வகை தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் வருகை புரிந்தார். இவருடன் இணைந்து ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அமிநோல்ஹுடா ஜஹி ஹாசான் வருகை புரிந்தார்.
கல்வி அமைச்சரின் வருகையின் போது பள்ளியின் தலைமையாசிரியர் எம்.கிருஷ்ணவேணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மூர்த்தி, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் பி.ராமசந்திரன், ஸ்ரீ காடிங் கிரான்திங் நிர்வாகி க.ரவிதிரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இவ்வருகையின் போது, பள்ளி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மீது அக்கறை செலுத்துதல், பள்ளி மாணவர்களின் கல்வி அடைவுநிலையை கண்காணித்தல், கட்டடம், மாணவர் பாதுகாப்பு கவனம் செலுத்துதல், பள்ளி ஆசிரியர்களின் நலன் மீது அக்கறை கொள்ளுதல் ஆகியவற்றைப் பேசப்பட்டது.
அதோடு, பள்ளியில் மாணவர்கள் 20க்கும் குறைவாக இருப்பதால், மாணவர்களின் எண்ணிகையை அதிகரிக்கும் வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது என கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
அந்தத் தோட்டத்தில் தமிழர்கள் 3 வீடுகளில் மட்டும் வசிக்கும் நிலையில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி மேலாளர் வாரியமும் இணைந்து மாணவர்களுக்குப் போக்குவரத்து தயார் செய்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர் என்று தியாகராஜ் தெரிவித்தார்.
மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் நூலகம், கணினி மையம், பள்ளி தளவாடப் பொருள்கள் ஆகியவையும் சரி பார்க்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். அதோடு, கல்வி அமைச்சர் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து பள்ளியின் நிலைமை, கல்வி கற்கும் சுற்றுச்சூழல் பற்றி தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தாலும், குறைந்தது 150 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கி இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தக்க நடவடிக்கைகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டதாகத் தியாகராஜ் தெரிவித்தார்.