துணை அமைச்சர் ஒதுக்கீடு நிதியிலிருந்து நன்கொடை வழங்கல்
கோலாலம்பூர், ஜன.5-
கோலாலம்பூர், கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் நன்கொடை காசோலையை வழங்கினார்கள்.
இந்த நன்கொடையானது ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த உதவும். மேலும் ஆலயத்தின் தினசரி செலவுகள், அன்னதானம், விசேஷ பூஜைகள் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும் என்று துணை அமைச்சர் கருத்துரைத்தார்.
இந்த நன்கொடை சிறப்பான வழியில் பயன்படும் என தான் நம்புவதாகக் கூறிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் கடவுள் நம்பிக்கை முக்கியமானது. நமது அன்றாட பணிகளில் இறைவனை வழிபடுவதும், ஆலயத்திற்குச் செல்வதும் ஒரு முக்கிய கடமையாக கொள்ளவேண்டும்.
ஆலயத்தின் வழி இந்த சமுதாயத்தினருக்கு நாம் எவ்வாறு உதவ முடியும், எவ்வாறு சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறியதற்கு இணங்க ‘ஒருவனுக்குள் கடவுள் பக்தியிருந்தால், அவன் பழி பாவத்திற்கு அஞ்சி சமுதாயத்திற்கு நன்மையுள்ளவனாக நடப்பான்‘ என்பது தான் இதன் சூட்சுமம். மனிதனின் ஆன்மாவை ஒருமைப்படுத்தும் இடம் ஆலயம். ஆகையால் ஆலயங்கள் தழைக்கவும் மேம்படுத்துவதற்கும் நாம் நம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும்.