பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்
சிரம்பான், ஜன. 5 –
மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) பிடிபடுவதற்கு முன்னர், லஞ்ச ஊழலில் ஈடுபடும் எண்ணம் ஏதாவது இருந்தால் அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தகைய ஒழுங்கீனமற்ற செயலில் அரசாங்க ஊழியர்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது நேரடியாக விசாரணை நடத்த எம்ஏசிசிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் தெரிவித்தார்.
“நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் எம்ஏசிசி மற்றும் போலீஸ் தரப்பை, கடந்த செவ்வாய்க்கிழமை பாடு திட்டத்தைத் துவக்கி வைத்தபோது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாக பாராட்டியிருந்தார். அதோடு, அமைச்சுகளில் லஞ்ச ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு தனிநபரையும் தேடிப் பிடிப்பதற்கான முழு அதிகாரத்தையும் அவ்விரு துறைகளுக்கும் அன்வார் வழங்கி இருந்தார்.
“அவரைப் (அன்வார்) பின்பற்றியே நானும் செயல்படுகிறேன். லஞ்ச ஊழலில் ஈடுபட யாராவது எண்ணம் கொண்டிருந்தால் அல்லது திட்டமிட்டிருந்தால், உங்களின் அலுவலகத்திற்கு எம்ஏசிசி வருவதற்கு முன்னரே அதை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது” என்று, சிரம்பானில் நேற்று நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க நிர்வாகக் கூட்டத்தில் உரையாற்றும்போது அமினுடின் தெரிவித்தார்.
சிறந்த முறையில் நிர்வாகப் பணியை மேற்கொள்வதுடன் பண விரயத்தைத் தவிர்க்குமாறும் மாநில அரசாங்கத்தின் ஒவ்வொரு வெள்ளியும் தேவைக்கு ஏற்பவே செலவிடப்படுவதை உறுதிப்படுத்துமாறும் மாநில அரசாங்க ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
நிதி நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மாநிலத்தின் வருமானம் 40 கோடி வெள்ளியிலிருந்து 50 கொடி வெள்ளிக்கு உயர்ந்திருப்பதாக அமினுடின் கூறினார்.