ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய 80 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை!
கோலாலம்பூர், ஜன. 5 –
நாட்டில் சிறு தோட்டக்காரர்களுக்குச் சொந்தமான சுமார் நான்கு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
“தொழிலாளர்கள் இல்லாததால், ரப்பர் மரங்களை சீவ முடியாத நிலையில் சுமார் நான்கு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டர் ரப்பர் தோட்டங்கள் இருக்கின்றன” என்று தோட்ட மற்றும் மூலப் பொருள் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கனி தெரிவித்தார்.
“கணக்குப்படி பார்த்தால், ஒன்றரை ஹெக்டருக்கு ஒரு தொழிலாளி தேவைப்படுகிறார். ஆதலால், 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையில் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்” என்று, நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஆள்பலப் பற்றாக்குறையினால், சிறு தோட்டக்காரர்களுக்குச் சொந்தமான சுமார் நான்கு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட ரப்பர் தோட்டங்கள் செயல்பட முடியாமல் இருப்பதன் காரணத்தினால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மலேசியா 230 கோடி வெள்ளியை இழந்து விட்டதாக, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி ஜொஹாரி தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது.
கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில், ரப்பர் உற்பத்தியின் போக்கில் சரிவு ஏற்பட்டிருந்ததாகவும் ஆள்பலப் பற்றாக்குறை மற்றும் அதிகச் செலவும் அதற்கான காரணங்களில் அடங்கும் என்றும் ஜொஹாரி கூறியிருந்தார்.
இதற்குத் தீர்வு காண, அரசாங்கத்தினால் தணிப்பு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படாவிட்டால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் தெரிவித்தார்.