எத்தனையெத்தனை நகர்வுகள் நகர்ந்தாலும் அன்வாரின் நகர்வு அதிரடி காட்டும்

கோலாலம்பூர், ஜன. 5-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க இனி எந்தவொரு சக்தியின் முயற்சியும் தவிடுபொடியாகும்.அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரர்களின் எந்தவொரு நகர்வும் இனி எடுபடாது. டத்தோ ஸ்ரீ அன்வாரின் நகர்வே அதிரடியாக இருக்கும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இஅயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் திட்டவட்டமாகக் கூறினார்.


கிட்டதட்ட 25 ஆண்டு காலம் அரசியல் போராட்டத்தில் பினிக்ஸ் பறவை போல் எழுந்து வந்து, அரசியல் பணியாற்றும் மறுமலர்ச்சி நாயகன் அன்வாரை எந்தச் சக்தியாலும் இனி தொடகூட முடியாது.அரசியலில் ஒரு வேங்கையாகவே வலம் வரும், அன்வாரின் அரசியல் வியுகத்தை இன்னும் சில அரசியல் புரிதலற்றவர்கள் புரியாமல் இருக்கின்றனர்.பக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு பொறுமையைக் கடைப்பிடித்து ஒற்றுமை எனும் ஒற்றை வரியைக் கையில் ஏந்தி மக்களைக் பாதுகாத்து வருபவர்தான் டத்தோ ஸ்ரீ அன்வார்.


அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று அரசியல் மூடர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தாலும் நாட்டு மக்கள் அவர் பின்னால்தான் இருக்கின்றனர் என்பதை சிலர் உணராமல் உள்ளனர்.ஓர் ஆட்சியை கவிழ்க்க இவர்கள் தொடங்கிய ‘ஷெரட்டன் நகர்வு’ இன்று வரை பல நகர்வுகளை நகர்த்தி, அரசியல் சித்துகளைத் தொடங்கி வருகின்றனர்.இப்போது துபாய் நகர்வு என்று கூறி, நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி மக்களையும் குழப்பிவரும் இந்த அரசியல் போக்கற்றவர்களை மக்கள் புறக்கணிக்கும் காலம் நெருங்கிவிட்டது.


டத்தோ ஸ்ரீ அன்வார் என்பவர் தனி மனிதன் அல்ல. இந்நாட்டின் 3 கோடி மக்களின் தலைவராக இருந்து வருபவர். இளம் வயதிலேயே அரசியல் சூழ்ச்சியால் சிறை சென்று வெற்றி திருமகனாகப் பிரதமர் என்னும் மகுடத்தைச் சூடினார்.அரசியலில் அவர் பட்ட காயங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அத்தகைய மனிதனை மீண்டும் மீண்டும் வீழ்த்துவதற்கு பல நகர்வுகளை அமைதியாக நடத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று இவர்கள் நினைக்கலாம். அது ஒரு போதும் நடக்கவே நடக்காது.அன்வாரின் அரசியல் என்பது ஜனநாயக ரீதியிலான அரசியலாகும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது போல் அவரும் கடமையைச் செய்து மக்கள் பணியாற்றி வருகிறார்.


அரசியலிருந்து அன்வாரை எப்படியாயினும் நகர்த்திவிட வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். ஆனாலும், ஒரு போதும் அந்த நகர்வை எல்லாம் வீழ்த்தி அன்வார் எனும் ஆளுமை நிச்சயம் வெற்றி கொள்ளும். அதுவரை இந்த அரசியல் பேர்வழிகளுக்கு அன்வாரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் அதிரடியை இடிமுழுக்கமாய் பாடமெடுக்கும்.
இவ்வாறு ஓம்ஸ் தியாகராஜன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.