ஒன்றுக்கும் மேற்பட்ட  மொழிகளில் புலமைபெற வேண்டியது அவசியம் அன்வார் வலியுறுத்தல்

கோலாலம்பூர்,  ஜன. 6-

தேசிய மொழிக்குப் பாதகம் ஏற்படும் வகையில்  ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு  தாம்  முக்கியத்துவம்  அளிக்கவில்லை  என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.

 அதே நேரத்தில், ஆங்கில மொழிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மலாய் மொழியை தாம் முன்னிறுத்தவில்லை என்றும் அவர் விளக்கினார்.

 உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்று  கோலாலம்பூர்  உலக வாணிக மையத்தில்   உயர்கல்வி  அமைச்சின் வியூகவியல்  சொற்பொழிவு  நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசியபோது அன்வார் கூறினார்.

  இந்தோனேசியாவும்  தாய்லாந்தும் தத்தம் தாய்மொழிகளின் பயன்பாட்டை  வலுவாக ஆதரித்து வந்தாலும், அந்நாடுகளின்  இளைஞர்கள்  உயர்கல்விக்கழகங்களில் ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகத் திகழ்கின்றனர் என்றார்.   

 அரசியல் சதிராட்டத்திலும்  புறவாசல் அரசாங்கம் அமைப்பதிலும் தம்மை கைதேர்ந்தவர்  என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சாடியிருப்பது பற்றி கருத்துரைத்த அன்வார், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து, தமது உடல்நலம்மீது அவர் கவனம் செலுத்துவது நல்லது என்றார்.