ஜொகூர் வெள்ளத்தில் கோத்தா திங்கி கடும் பாதிப்பு! பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜொகூர், ஜன. 6 –

ஜொகூர் மாநிலத்தைச் சூழ்ந்து வரும் மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடும் தொடர் மழையினால், நேற்று மாலை வரையில் மொத்தம் நான்கு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோத்தா திங்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 394 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,510 பேர், 14 வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இந்த எண்ணிக்கை 1,484-ஆக இருந்தது. அவர்கள் 13 நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் கோத்தா திங்கி மாவட்டத்தில் மட்டும் 187 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேர் ஏழு நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக, ஜொகூர் வெள்ளப் பேரிடர் நிர்வாகக் குழுத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி நேற்று தெரிவித்தார்.

“ஜொகூர் பாரு மாவட்டத்திலும் 111 குடும்பங்களைச் சேர்ந்த 432 பேர் நான்கு வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இந்நிலையில், மெர்சிங்கில் நிலை சற்று சீரடைந்து தற்போது 265 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் இன்னமும் தங்கி இருக்கின்றனர். குளுவாங்கில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 77 பேர் ஒரு நிவாரண மையத்தில் தங்கியிருக்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஜொகூரின் பல பகுதிகள் நாளை வரை மோசமாக பாதிக்கப்பட கூடும் என்ற தனது எச்சரிக்கையை மெட்மலேசியா நேற்றும் விடுத்தது.

இத்தகைய மோசமான மழை எச்சரிக்கை செகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் நீடிக்கும் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது கூறியது.

ஜொகூரைத் தவிர்த்து பகாங்கின் குவாந்தான், பெக்கான்,  ரொம்பினிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அளவுக்கு கடும் தொடர் மழை பெய்யும் என்று அவ்விலாகா எச்சரித்துள்ளது.