மித்ராவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்கும்

கோலாலம்பூர், ஜன.6-

அண்மையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைபைத் தொடர்ந்து மித்ராவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சும் தொடர்புடைய நிறுவனங்களின் பங்கையும் மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முதன்மை நோக்கத்தில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆருண் அகோ டகாங் தெரிவித்தார். 

தேசிய ஒற்றுமைக் கொள்கையின் அடிப்படையில் சிறுபான்மைச் சமூகத்தினரைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கிலும் மலேசிய இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு நேர்மறையாக நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை காட்டும் வகையிலும் இந்த இரு தரப்பினரும் ஒற்றுமைத்துறையின் அமைச்சின் கீழ் செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

கல்வி, பொருளாதாரம், சமூகத் துறைகள் உட்பட இந்திய சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகள் அல்லது திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குத் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு உறுதிபூண்டுள்ளது. 

குறைந்த வருமானம் கொண்ட இந்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குத் திறன் மேம்பாட்டு திட்டங்கள், மனித மூலதன மேம்பாடு, தொழில்முனைவோர் வாய்ப்புகள் ஆகியவைத் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மடானி பொருளாதாரத்தின் கட்டமைப்பில், மலேசியாவில் அனைத்து இனங்களின் வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்படுகிறது. 

அது தொடர்பாக, மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்துவதில் சமூக செயல் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மறுசீரமைப்பு நல்ல தாக்கத்தையும், மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினையைத் தொடர்ந்து கையாள்வதற்கான அமைச்சகத்தின் தயார்நிலையையும் கொண்டுவரும் என்று நம்புவதாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆருண் தெரிவித்தார்.