எதற்காக தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்ய வேண்டும்?

ஜோர்ஜ்டவுன், ஜன. 8 –
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தற்போது தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது குறித்து தாம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில், அவ்வாரியத் தலைவர் பதவியை தாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அதன் தலைவர் ஆர்எஸ்என் ராயர் நிராகரித்துள்ளார்.

அவ்வாரியம் புதிய அமைச்சின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த பின்னர், அது குறித்து ராயர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பொதுமக்களை குழப்பமடையச் செய்திருப்பதாக, அவ்வாரியத்தின் முன்னாள் அறங்காவலரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். சதீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சின் அறிவிப்பை வரவேற்றிருந்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர், தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் பார்வையின் கீழ் வாரியம் இருப்பதால், அது பெரிய அளவில் மானியத்தைப் பெறக் கூடும் என்றும் கூறியிருந்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டிருந்தாலும், அவ்வாரியத்தின் கட்டுப்பாடு இன்னமும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ்தான் இருக்கும் என்பதை, ராயரின் கருத்துக்கள் உள்ளடக்கியிருக்கவில்லை என்பதால், அவர் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சதீஸ் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த ராயர், ஒரு அமைச்சின் கீழ் வாரியம் வைக்கப்பட்டிருந்தாலும், வாரியத்தின் அறங்காவலர்களை நியமிக்க மாநில அரசாங்கத்திற்கு, 1906-ஆம் ஆண்டு இந்து அறப்பணி சட்டம் தனிச் சிறப்பை வழங்குவதால், வாரியத்தின் சுயாட்சி பறிக்கப்படாது என்பதை தாம் அறிந்து வைத்திருப்பதாகக் கூறினார்.

வாரியம் கடந்த காலங்களில் மனித வளத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டிருந்த சரித்திரம் இருப்பதால், தற்போது அது மீண்டும் ஒரு மத்திய அமைச்சின் கீழ் வைக்கப்பட்டிருப்பது புதிய விவகாரம் அல்ல என்றும் ராயர் குறிப்பிட்டார்.

“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைப் பொறுத்த வரையில், எங்கள் பணியை நாங்கள் மேற்கொள்ள இன்னமும் நாங்கள் சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் கீழ்தான் இருப்போம்” என்று ராயர் கூறினார்.

“ஓர் அமைச்சின் கீழ் இருந்தால் கூடுதல் மானியத்தைப் பெறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என்றுதான் நான் கருத்துக் கூறியிருந்தேன். ஆதலால், நான் ஏன் பதவி விலக வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரிய விவகாரங்கள் உட்பட இந்துக்கள் மற்றும் இந்திய சமூகம் மீது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்கறை கொண்டிருப்பதை, அவ்வாரியம் சம்பந்தப்பட்ட அறிவிப்பு காட்டுவதாகவும் ராயர் கூறினார்.

கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஏதும் எழுந்தால், அமைச்சிடமிருந்து உதவிகளைக் கோர வாரியத்திற்கு இந்நடவடிக்கை அனுமதி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசாங்கம், வாரியம் மீதான முழு கட்டுப்பாடுகளையும் இன்னமும் கொண்டிருப்பதாக, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் நேற்றுமுன்தினம் உறுதியளித்திருந்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை ஓர் அமைச்சின் கீழ் வைத்திருக்கும் நடவடிக்கை குறித்து மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் அது அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்திருப்பதாகவும் மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோவ் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஆரோன், தமது அமைச்சின் மூலம் மத்திய அரசாங்கம், 1969-ஆம் ஆண்டு அமைச்சரவை நடவடிக்கைகளின் கீழ் அவ்வாரியத்தை கண்காணித்து மட்டுமே வரும் என்றார்.

வாரியத்தின் ஆண்டறிக்கைகளையும் நிதி அறிக்கைகளையும் தமது அமைச்சு அமைச்சரவையிலும் மக்களவையிலும் சமர்ப்பிக்கும் என்றும் ஆரோன் கூறியிருந்தார்.