பகடிவதை தொடர்பாக 35 வாக்குமூலங்கள்! – காவல்துறை அறிவிப்பு!

பகடிவதையால் பள்ளியின் விடுதியில் இருந்து மாணவர் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் உட்பட, சுமார் 35 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு முன்பு இன்னும் பல நபர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பகடிவதை நடந்ததாகக் கூறப்படும் விடுதியிலிருந்து தப்பி ஓடிய மாணவர் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் 20 ல் திறக்கப்பட்டதாக அல்லாவுடின் உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட 14 வயது மாணவனின் தாயார் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்!