போலீஸ் அதிகாரியாவதே எனது லட்சியம்
சிரம்பான், ஜன. 8-
எதிர்காலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதே தனது லட்சியம் என்று பத்து வயதான ஆர்.ஷிவானி தெரிவித்துள்ளார். கணிதம்தான் தனக்கு பிடித்த பாடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிரிமைப் பிரச்சினை காரணமாக ஷிவானியால் கடந்தாண்டு பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து, பள்ளிப் படிப்பைத் தொடர்வதற்கு உதவக் கோரி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அன்மையில் அச்சிறுமி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
![](https://harapandaily.com/wp-content/uploads/2024/01/176818.jpg)
ஷிவானி எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தேசிய பதிவுத்துறை வாயிலாக கல்வியமைச்சு மேற்கொண்ட முயற்சியினால் அச்சிறுமிக்கு பிறப்புப் பத்திரம் கிடைத்துள்ளது.பிறப்புப் பத்திரம் கிடைத்திருப்பதால் வரும் மார்ச் மாதத்தில் தன்னுடைய படிப்பை அவர் மீண்டும் தொடரவுள்ளார்.
“ ஷிவானி முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். ஆனால், பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் கடந்தாண்டில் அவர் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை” என்று அச்சிறுமியின் தந்தை பி. ராஜேஸ்வரன் குறிப்பிட்டார். தம்முடைய மகள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்குத் தீர்வுகண்ட கல்வியமைச்சுக்கு நன்றிகூறுவதாகவும் அவர் சொன்னார்.
மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஷிவானி மிகுந்த ஆர்வமுடன் உள்ளார். கடந்த ஓராண்டாக அத்தை பி.லோகேஸ்வரிதான் (™வயது 43) அவளுக்குப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்து வந்தார் என்று செனவாங்கில் உள்ள தமது வீட்டில் செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரன் கூறினார்.
தாமான் ஸ்ரீபாகி தேசியப் பள்ளியைச் சேர்ந்தவரான ஷிவானி, மார்ச் மாதம் பள்ளிக்குச் செல்லவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாகவும் தமக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார்.போலீஸ் அதிகாரியாவதுதான் எனது லட்சியம். கணிதம்தான் எனக்குப் பிடித்த பாடம் என்றும் அவர் உற்சாகத்துடன் கூறினார்.