சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட்டால் கல்வி அமைச்சின் வாய்ப்புகளைப் பெற்று உயர்வடையலாம்
( தி.ஆர்.மேத்தியூஸ்)
நாட்டில் புதிய தமிழ்ப்பள்ளிகளை கட்டுவதற்கோ அல்லது சில பள்ளிகளை மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ தற்போதுள்ள கல்வி அமைச்சர் ஃ பட்லினா சிடேக்கின் உதவியாலும்,ஒத்துழைப்பாலும் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும் என அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
அதே வேளையில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும்,கல்வி மேம்பாட்டிற்கும் அரசுசாரா இந்திய அமைப்புகள்,பள்ளி தலைமையாசிரியர் மன்றங்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,பள்ளி மேலாளர் வாரியங்கள்,தமிழ்சார்ந்த இயக்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றுவதும் முக்கியமாகும்.
தற்போது நாட்டிலுள்ள 529 தமிழ்ப்பள்ளிகளில் 79,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.அதே வேளையில் நாட்டின் தமிழ்ப்பள்ளி வளர்ச்சியை குறிக்கும் வகையில்,பேராக் மாநிலத்தில் மேலும் ஒரு புதியத் தமிழ்ப்பள்ளி விரைவில் திறக்கப்படவுள்ளது.
2024 மார்ச்சில் புதிய பள்ளி தவணை தொடங்கும் போது பேராக் மாநிலத்தில் இந்த 530ஆவது புதிய தமிழ்ப்பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பு, இப்பள்ளியில் 150 மாணவர்களை சேர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி,போதுமான மாணவர்கள் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்துவது அனைத்து தரப்பினரின் கடமையாகும்.
இதே போன்று நாட்டில் மாணவர்கள் குறைவாக உள்ள தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு,இவ்வாண்டில் அதனை ஒரு லட்சியமாகவும்,நமது தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைமனதில் நிறுத்தி அனைவரும் செயல்பட வேண்டுமென தியாகராஜ் சங்கரநாராயணன் கேட்டுக் கொண்டார்.
தென் செபராங் பிறை,சுங்கை பாக்காப் தாமான் செரூலிங் இமாஸ் இந்திய குடியிருப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்,இங்குள்ள பை தெடக் சீனப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற 2024 பொங்கல் கலை இரவு நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார்.
கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்று, தமிழ்ப்பள்ளியையும், இந்திய சமுதாயத்தையும் தனது இரு கண்களாக எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமக்கு, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆதரவுக்கரம் வழங்கினால், கல்வியமைச்சின் உதவியோடு, இந்திய சமுதாயம் கல்வி நிலையில் மேலும் உயர்வடைய வாய்ப்புகள் உள்ளதென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலவை உறுப்பினரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவருமான செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம்,தென் செபராங் பிறை போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஏஎஸ்பி கோவிந்தசாமி,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ்.சுந்தரராஜூவின் சிறப்பு அதிகாரி ஜோதி இளம்பேறு,பினாங்கு மஇகா தலைவர் டத்தோ தினகரன் ஜெயபாலன் உட்பட திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.