பெண்கள் அதிகமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும்
(இரா.கோபி)
சுபாங், ஜன. 9 –
சுமார் 18 ஆண்டுகளாக எம்எம்ஜிவி கால்பந்து குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் 28 கால்பந்து விளையாட்டளர்களும் 10 உறுப்பினர்களும் இருப்பதாக அதன் தலைவர் கண்ணன் தெரிவித்தார்.கால்பந்து குழுவின் 18 ஆம் ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு சிறப்பு வருகை புரிந்த ஷா ஆலம் காவல்தூறை அதிகாரி ஏஎஸ்பி ராஜன் சிறப்புரை ஆற்றினார்.
18 ஆண்டுகளாக ஒரு கால்பந்து குழு தமிழ்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் பல உதவிகள் செய்து வருவது வரவேற்கக்கூடியது.நாம் இப்போது கால்பந்து விளையாண்டுக் கொண்டிருக்கோம். ஆனால், நம் பிள்ளைகள் ஒதுங்கி செல்கின்றனர். நம் பிள்ளைகள் விளையாட்டுத் துறைகளில் பங்கு கொள்வது மிக குறைவாக உள்ளது.
இன்று நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்பந்தும் ஒரு காரணம். மிஃபா வாயிலாக நிறைய விளையாட்டு துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளோம்.இந்த தடவை 900 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 246 பெண்கள் பங்கேற்றனர். இது ஒரு சரித்திரம் என்று சொல்லலாம். பெண் பிள்ளைகள் கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்டதற்கு பெற்றோர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை நம்பி கால்பந்து விளையாட்டுக்கு அனுப்பினால் கண்டிப்பாக அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
ஆண் பிள்ளைகளோ பெண் பிள்ளைகளோ சரியான வழியில் சென்றால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். பிள்ளைகள் விளையாட்டிற்கு என்று ஒரு நேரம் ஒதுக்கினால் தான் தவறான விஷயங்களுக்கு போக மாட்டார்கள்; தவறான சிந்தனைகளும் வராது.
15 முதல் 16 வயது பெண் பிள்ளைகளின் பெற்றோர் சில நேரங்களில் காவல் நிலையத்தில் தலை குனிந்து கண்ணீருடன் நின்று கொண்டிருப்பார்கள். காரணம் கேட்டால் படிக்கின்ற பிள்ளை கர்ப்பமாக இருக்கிறது என்று கண்ணீருடன் தெரிவிப்பர்.
இதற்கு என்ன காரணம்? அந்த பெண் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் அவர்களை விளையாட்டுத் துறை வாயிலாக அவர்களின் பாதையை மாற்றி அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.
ஒரு வருத்தமான விஷயம். கடந்த காலக்கட்டத்தில் நமது மலேசிய நாட்டின் கால்பந்து குழுவிற்கு இந்தியர்கள் விளையாடினர். ஆனால், இன்று ஓர் இந்தியர் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயவு செய்து உங்கள் பிள்ளைகளை அகாடமி மூலம் அனுப்பி ஆர்வம் காட்டினால் படிப்படியாக முன்னுக்கு வருவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் சிறப்பு வருகை புரிந்த பூச்சோங் தொழிலதிபர் டத்தோ பத்மநாதன் எம்எம்ஜிவி கால்பந்து குழுவிற்கு வெ.5,000 வழங்கினார். இந்தக் கால்பந்து குழு மேலும் வெற்றி பெற தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.