முன்னாள் பிரதமரிடம் விரைவில் விசாரணை எம்ஏசிசி தலைவர் அறிவிப்பு

சிப்பாங், ஜன. 9-
முன்னாள் பிரதமர் ஒருவரும் அவரின்கீழ் பணியாற்றிய உதவியாளர்களும் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என்று மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நேற்று தெரிவித்தார்.
இப்போதைக்கு முன்னாள் பிரதமர் ஒருவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.


விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பவர் ஒன்பதாவது பிரதமரா என்று கேட்கப்பட்டதற்கு, “முன்னாள் பிரதமருக்கும் முன்னாள் உதவியாளர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்படும்” என்று அவர் பதிலளித்தார். நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆவார்.


2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த இரண்டு முந்தைய அரசாங்கங்கள் தங்களின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்காக எழுபது கோடி வெள்ளியைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் எம்ஏசிசி புலன்விசாரணையைத் தொடங்கியது.அப்பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை எம்ஏசிசி அறியவிரும்புகிறது என்று அஸாம் கூறினார்.


அப்பணத்திற்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது பற்றி நாங்கள் விசாரிக்கப் போவதில்லை. அப்பணம் எவ்வாறு செலவிடப்பட்டது, எந்தெந்த நிறுவனங்களுக்கு அது கிடைத்தது என்பதைக் கண்டறிவதுதான் எங்களின் நோக்கமாகும். அப்பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது பற்றி விசாரிப்பதுதான் எங்களின் கடமையாகும் என்றார் அவர்.அப்பணத்தைப் பெற்றுள்ள நிறுவனங்களையும் எம்ஏசிசி விசாரணைக்கு அழைக்கும் என்று அஸாம் சொன்னார்.


2020ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டுவரை கூட்டரசு அரசாங்கத்தின் விளம்பர நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 கோடி வெள்ளி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அம்னோ தலைவர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் கடந்த டிசம்பரில் போலீசார் தெரிவித்திருந்தனர்.


கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முந்தைய அரசாங்கங்கள் 2020ஆம் ஆண்டிலிருந்து எழுபது கோடி வெள்ளியை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.
எட்டாவது பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஐம்பது கோடி வெள்ளியும் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி எஞ்சிய இருபது கோடி வெள்ளியும் செலவிட்டுள்ளனர் என்றும் கூறியிருந்தார்.


இதனிடையே, அமான் பாலஸ்தீன் அறநிறுவனம் மீதான புலன்விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
பாலஸ்தீன மக்களுக்கு நிதி திரட்டும் பணியை மேற்கொண்டுவந்த அமான் பாலஸ்தீன் எனும் அரசு சாரா அமைப்பில் ஏழு கோடி வெள்ளி மோசடி நடந்துள்ளது என்று புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய எம்ஏசிசி, அந்த அமைப்புடன் தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகளை கடந்த நவம்பர் மாதம் முடக்கியது.