பேரரசர், பேரரசிக்கு நன்றி நவிழ்தல் பேரணி
கோலாலம்பூர், ஜன. 9-
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா அமாட் ஷாவுக்கும் அவரின் துணைவியார் பேரரசி துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டரியாவுக்கும் நன்றி தெரிவிக்கும் பேரணி நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. அப்பேரணியில் பேரரசரர் தம்பதியர் காட்டிய தன்னடக்கமும் பணிவன்பும் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
செத்தியா எனும் நாட்டுப்பற்று பாடலை பேரரசர் தம்பதியர் ஆயுதப்படை உறுப்பினர்களுடன் சேர்ந்து பாடினர். எழுச்சி மிக்க பேரணிக் காட்சிகளை பேரரசியார் தமது கைப்பேசியில் பதிவு செய்ததும் பலரின் மனதைக் கவர்ந்தது.
“டவுலாட் துவாங்கு” ( மன்னர் நீடூழி வாழ்க)எனும் தலைப்பிலான கவிதையை சார்ஜண்ட் நூர் அயின் ஜாஸ்மின் மற்றும் ஏர்கிராஃப்ட்மன் அப்துல்லா ரோஸ்லி ஆகியோர் பாடியபோது பேரரசியார் மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுத்தார்.
பேரரசர் அப்துல்லாவின் ஐந்தாண்டுகால தலைமைத்துவத்தையும் அக்காலகட்டத்தில் நாடு எதிர்நோக்கிய சவால்களையும் அக்கவிதை விவரித்தது. மக்களின்பால் பேரரசர் தம்பதியர் காட்டி வந்த கனிவையும் அது எடுத்துரைத்தது.பதினாறாவது பேரரசரான அப்துல்லாவின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் தேதியன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நன்றி நவிழ்தல் பேரணி சுங்கை பீசியின் கேம் பெர்டானாவில் நேற்று நடைபெற்றது.