அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது

கோலாலம்பூர், ஜன. 10-
அரசியல் சித்து விளையாட்டுகளில் அரண்மனை தலையிடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.
நாட்டைத் தொடர்ந்து நிர்வகித்து வருமாறு பிரதமர் எனும் வகையில் தமக்கும் மடானி அரசாங்கத்திற்கும் அவர் கட்டளையிட்டுள்ளார் என்றும் தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமருக்கும் மாமன்னருக்கும் இடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய சந்திப்பில் அந்த விவகாரம் பரிமாறப்பட்டது.
நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தும்படி பிரதமர் எனும் வகையில் எனக்கும் மடானி அரசாங்கத்திற்கும் அவர் கட்டளையிட்டுள்ளார். மேலும், எந்தவொரு அரசியல் சித்து விளையாட்டிலும் அரண்மனை தலையிடாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அன்வார் குறிப்பிட்டார்.


அன்வாரின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அரசியல் சதித்திட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து ஊகங்கள் நிலவிவரும் வேளையில் மாமன்னர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.யாராவது ஒருவர் ஐம்பது கோடி வெள்ளியோ எழுபத்தைந்து கோடி வெள்ளியோ நன்கொடை அளிக்க விரும்பினால், அப்பணத்தை நாட்டில் உள்ள ஏழைமக்களுக்கும் வசதிகுறைந்தவர்களுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கும்படியும் நான் ஆலோசனை கூற விரும்புகிறேன் என்றும் அன்வார் தெரிவித்தார்.


அன்வாரின் இந்த அறிவிப்புக்கு என்ன பொருள் என்பது விளங்கவில்லை.
ஆயினும், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்திழுப்பதற்கு எதிர்க்கட்சியினர் பெரும் பணத்தைச் செலவிட்டு வருவதாகக் கூறப்படும் விவகாரத்தை அன்வார் அவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முதல்நாள் மாமன்னரை பிரதமர் சந்திப்பது ஒரு வழக்கமான நடைமுறையாகும்.தற்போதைய மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் பதவிக் காலம் ஜனவரி 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின், அப்பொறுப்பை ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஏற்றுக்கொள்வார்.