தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை தர வேண்டும்

கோலாலம்பூர், ஜன.10-
அண்மையில் திராவிடக் கழக மாநாட்டுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் பொழுது தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அதிலும் குறிப்பாக, யாரும் அவரைக் கண்டிக்காமல், அதனைக் காணொலியாகப் பதிவு செய்து அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என்னை பொறுத்தவரையில், இச்செயல் அந்த இடத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞான சைமன் கூறினார்.
தமிழ் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்கும் போது உங்களுக்கு மட்டும் எழுந்து நிற்பதில் என்ன பிரச்சினை என்று கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அதனைப் பதிவு செய்து பரவலாக்கிவிட்டனர்.


இதில் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. எதிர்மறையான கருத்துகளை மக்களிடம் விதைப்பதைவிட நேர்மறையான கருத்துகளை விதைக்க வேண்டும்.
இதனால் தமிழ் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டுமா என்ற தேவையில்லாத கேள்விகளும் குழப்பங்களும்தான் பிறக்கிறது.


அதிலும், மதமாற்ற கும்பலைச் சேர்ந்தவர்களால்தான் இந்தத் தமிழ் வாழ்த்து பாடப்படுகிறது என்று ஒருவர் குரல் பதிவு செய்துள்ளார்.
தேவாரப் பாடலுக்கு எழுந்து நிற்கலாம்; தமிழ் வாழ்த்திற்குத் தேவையில்லை என்பது அவரின் அறிவின்மையைக் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களைப் பிரித்துக் காட்டுவது ஒரு தவறான செயலாகும். தமிழ் வாழ்த்து பாடலை பாடிய ஒருவரை மத ரீதியில் அடையாளம் காணுவது தவறானதாகும். இதனை வன்மையாகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டிக்கிறது.


இது நம் மொழி. நம்முடைய மொழிக்கும் பண்பாட்டிற்கும் நாமே எதிரியாக இருக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நேர்மறையான கருத்துகளை மக்களிடம் பதியச் செய்யுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் பெ.ராஜேந்திரன் கூறுகையில், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், அரசியல் என எல்லா நிலையிலும் நிரம்பியிருப்பதே தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்று அர்த்தமாகிறது.மேலும், நம்முடைய தமிழ் மொழியானது முத்தமிழ் என்பதிலிருந்து இன்று கணினித் தமிழ் வரைக்கும் வளர்ந்துள்ளது.


இனி எல்லா நிலையிலும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்ற அடிப்படையைத் தமிழ் வாழ்த்து கொண்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் பாடல் மலேசியாவிற்கு ஏற்ற தமிழ் வாழ்த்தா என்று மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் கேட்டோம். இந்தப் பாடல் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிந்தனையாக இருந்தாலும், இது நம் நாட்டின் சமூகத்தினருக்கானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் என்றார்.
முதலில் ஈப்போ காவல் நிலையத்தில் பிரபு கிருஷ்ணன் புகார் செய்துள்ளார். இரண்டாவது புகாராக, தமிழ் எழுத்தாளர் சங்கம் செந்தூல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளது என்று சைமன் கூறினார்.