வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

புத்ராஜெயா, ஜன. 10-
சபா மலேசியா பல்கலைக்கழகத்தின் (யூஎம்எஸ்) குடிநீர் விநியோக பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்தாண்டு முப்பது லட்சம் வெள்ளி நிதியுதவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. ஆனால்இதுவரை அப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அந்தப் பணம் என்ன ஆனது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேள்வியெழுப்பினார்.


அப்பல்கலைக்கழகத்திற்கு நேற்றுமுன்தினம் உயர்கல்வியமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் வருகை மேற்கொண்ட வேளையில், குடிநீர் விநியோகம் மோசமாக இருப்பது குறித்து அவரிடம் மாணவர்கள் புகார் கூறினர் என்று நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார். அந்த பிரச்சினைக்கு இதுவரை ஏன் தீர்வுகாணப்படவில்லை என்பது தெரியவில்லை. அதற்கான நிதிஒதுக்கீட்டுக்கு கடந்தாண்டே நான் ஒப்புதல் அளித்து விட்டேன். ஒரு வேளை அத்திட்டத்தை அமல்படுத்த அதிக காலஅவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். இதற்காக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய விரிவான அறிக்கையை எதிர்பார்க்கிறேன் என்றார் அன்வார்.


குடிநீர்விநியோக பிரச்சினையைக் களைவதற்காக யூஎம்எஸ் பல்கலைக்கழகம் இதுவரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள உயர்கல்வியமைச்சின் தலைமைச் செயலாளரைத் தொடர்புகொள்ளும்படி கருவூலத்தின் தலைமைச் செயலாளருக்குத் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார். யூஎம்எஸ் குடிநீர் பிரச்சினையைக் களைவதற்காக மாநில அரசுக்கு மத்திய அரசாங்கம் முப்பது லட்சம் வெள்ளி வழங்கும் என்று கடந்தாண்டு மே 31ஆம் தேதியன்று அன்வார் அறிவித்திருந்தார். நேற்றுமுன்தினம் சபாவில் கோத்தா கினாபாலுவுக்கு வருகை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஸம்ரி, அப்பல்கலைக்கழகத்தின் குடிநீர் விநியோகப் பிரச்சினையைக் களைய கூடுதலாக இருபது லட்சம் வெள்ளி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.