ஆர்டிஎஸ் லிங்க் ரயில்பாதை இணைப்பு அன்வார், லீ தொடக்கி வைத்தனர்

ஜொகூர்பாரு, ஜன. 12-
ஜொகூர்பாரு- சிங்கப்பூர் துரித ரயில்பாதைத் திட்டத்தின் (ஆர்டிஎஸ் லிங்க்) ஒரு பகுதியான பால இணைப்புப் பணியை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் நேற்று கூட்டாகத் தொடக்கி வைத்தனர்.


ஜொகூர் நீரிணைப் பகுதியில் உள்ள ஆர்டிஎஸ் லிங்க் திட்ட நிர்மாணிப்புத் தளத்தில் 17.1 மீட்டர் நீளம் கொண்ட காங்கிரிட் தூண்களை இணைக்கும் பணியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.மலேசியாவின் பியர் (கப்பல்துறை) 47க்கும் சிங்கப்பூரின் பியர் 48க்கும் இடையில் கடல்பாலத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தூண்கள் மொத்தம் 340 டன் எடை கொண்டவை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 26 மீட்டர் உயரத்திற்கு அப்பாலம் நிர்மாணிக்கப்படுகிறது.


ஆர்டிஎஸ் லிங்க் ரயில்பாதைத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.ஆர்டிஎஸ் லிங்க் ரயில் இணைப்புப் பாதை ஜொகூரின் புக்கிட் சாகார் மற்றும் சிங்கையின் ™ஊட்லண்ட்ஸ் நோர்த் ரயில் நிலையங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும். இவ்விரு இடங்களுக்கு இடையிலான தூரம் நான்கு கிலோமீட்டர் ஆகும். ஒரு நிலையத்திலிருந்து மறு நிலையத்திற்கு மணிக்கு பத்தாயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும். இவ்விரு நிலையங்களுக்கு இடையிலான பயணநேரம் ஐந்து நிமிடங்கள் ஆகும்.
ஜொகூர் காஸ்வே பாலத்தை நாள்தோறும் மூன்றரை லட்சம் கடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.