கால்பந்து சங்கத்தில் வெ. 60 லட்சம் ஊழல்:சனுசியிடம் 3 மணிநேரம் விசாரணை

புத்ராஜெயா, ஜன. 12-
கெடா கால்பந்து சங்கத்தில் நிகழ்ந்துள்ள அறுபது லட்சம் வெள்ளி ஊழல் தொடர்பில் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோரிடம் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைமையகத்தில் நேற்று கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.


சனுசியை ஏற்றியிருந்த வெள்ளி நிற (சில்வர்) மெர்சிடிஸ் கார் நேற்று முற்பகல் 11.37 மணியளவில் எம்ஏசிசி தலைமைகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
கார் நிற்காமல் சென்றதால் அவரிடமிருந்து விளக்கம் கோருவதற்கு செய்தியாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.


முன்னதாக, காலை 8.30மணிக்கு பாஸ் கட்சியைச் சேர்ந்தவரான சனுசியை ஏற்றியிருந்த கார் எம்ஏசிசி தலைமையக வளாகத்திற்குள் நுழைவது தென்பட்டது.
இதனிடையே, அந்த ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என்று புலனாய்வுக் குழுவின் மூத்த தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்தார்.


ஆயினும், புலன்விசாரணை சம்பந்தப்பட்ட விவரங்கள் வெளியிடப்படாது. அந்த விவரங்கள் ரகசியமானவை, அதிமுக்கியமானவை என்பதே இதற்கு காரணமாகும் என்றார்.


கெடா கால்பந்து சங்கத்தில் லஞ்சஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுவது தம்மை பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகும் என்று சனுசி குறிப்பிட்டுள்ளார். அவர் கெடா கால்பந்து சங்கத்தின் தலைவரும் ஆவார்.