சமூகப்பணி ஒற்றுமையைப் மேம்படுத்தும்

கோலாலம்பூர், ஜன. 12 –
சமூகப்பணியே பெரும்பணி அப்பணியை முறையே வழிநடத்தி செயலாற்றுவது தனி பெருமையே என்றால் அது மிகையாகாது. சமூகப்பணியினால் ஒற்றுமையை மேம்படுத்த முடியும். தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதால் சமூகத்தை வலுப்படுத்தவும், அதிகாரமளிக்கவும், ஒன்றிணைப்பை மேம்படுத்தவும், சமூக நல்லறத்தை வித்திடவும் தேசிய ஒற்றுமைக்கு பங்காற்றும் சமூக ஊடகமாக இடம்பெறுகிறது என்பது வெள்ளிடைமலையாகும் என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டகாங் கூறினார்.


நேற்று சிலாங்கூர் சீன வர்த்தகம், தொழில்துறை, செங் பெங், விஸ்மா கேஎல்எஸ்சிசிசிஐயில் நடைபெற்ற மைஹீரோ 4.0 விருது விழாவில் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் சிறப்பு வருகை புரிந்து அவ்விழாவை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள சீன வர்த்தகம், தொழில்துறை, நன்யாங் சியாங் பாவ் நாளிதழோடு இணைந்து நடைபெற்றது.
அவர் மேலும் கூறுகையில், மடானி மலேசியாவின் சூழலைப் பாராட்டும் வகையில் உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்ப்பதால், சமூகம் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்யும் இயல்பை வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
அதோடு, சமுதாயத்தில் தன்னார்வலர்களின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தீவிரப்படுத்தப்படும் என்றும் இதன்மூலம் தலைமைத்துவமிக்க சமூகத்தினரையும் தேசத்தையும் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து, ‘டூத்தா பெர்பாடுவான்‘ முன்முயற்சியை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளதாக அறிமுகப்படுத்தினார்.இவ்வாண்டு முதல் 50 பேருக்கு ‘டூத்தா பெர்பாடுவான்‘ அங்கீகாரமும் இரண்டு பேருக்கு ஒற்றுமை சின்ன அங்கீகரிப்பும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த முன்முயற்சி இளைஞர்களின் திறன்களையும் அறிவையும் வளர்ப்பதோடு சமூகத்தின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் செயலாற்றும் தலைவர்களாக மாற வேண்டும். டூத்தா பெர்பாடுவானின் முன்முயற்சியின் நான்கு முக்கிய பகுதிகளாக தன்னார்வத் தொண்டு மூலம் ஒற்றுமை, ருக்குன் நெகாராவின் பாராட்டு, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துதல், தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


மை ஹீரோ 4.0 விருது, மதம், இனம் பாராமல் மக்களுக்கு உதவுவதில் விடாமுயற்சியும் தைரியமும் உயர்ந்த மன உறுதியையும் வெளிப்படுத்தும் மலேசியர்களுக்கான அங்கீகாரமாகும். 2014ஆம் ஆண்டு முதல் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மை ஹீரோ பல சாதனையாளர்களை மொத்தம் 18 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டிற்கான மை ஹீரோ விருது அதன் நான்காவது பதிப்பில் (4.0) இடம்பெற்றுள்ளது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன வர்த்தக, தொழில்துறை அவையின் தலைவர், எங் யீ பிங் கூறுகையில், மைஹிரோ 4.0 ஆனது எப்பொழுதும் ஒற்றுமை தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும், இதனால், அமைதியான சூழலை மலேசியாவில் நிலைப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.


மேலும், இந்நடவடிக்கையின் மூலம், சமூகபணியாளர்களை ஊக்குவிப்பதோடு மற்றவர்களையும் சமூகபணியில் ஈடுபடச் செய்ய வழிவகுக்கிறது. நல்ல எண்ணத்தோடும், மலேசியா மக்களின் நலத்தின் மேம்பாட்டினோடும் செயல்படுத்தப்படும் அங்கீகரிப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


மைஹீரோ 4.0 நீதிபதிக் குழுவில் பணியாற்றிய நவநீத கிருஷ்ணனுக்கும் தமிழ் மலர் சார்பில் கலந்து கொண்ட அதன் தலைமை ஆசிரியர் கு.தேவேந்திரனுக்குச் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.இம்முறை, மைஹிரோ 4.0 விருதில் 13 பேர் தகுதி பட்டியலிலிருந்து ஏழு பேருக்குப் பாராட்டு சான்றிதழும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன. மேலும், ஆறு பேருக்குத் தங்கப் பதக்கம், டூத்தா பெர்பாடுவான் சிறப்புச் சான்றிதழ், வெ.5000 ஆகியவை வழங்கப்பட்டன. தாமோதரன் ராஜாகோபால், ஹரிகணேஷ் விஸ்வநாதன், டத்தோ டாக்டர் சுபத்ரா தேவி குட்டன் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கமும், நெவில் அந்தோனி ஃபெர்நாண்டஸ், முகமது ஃபர்ஹான் பராம் ஆகியோருக்குத் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.


இவ்விழாவின் ஆதரவாளர்கள், நீதிபதிகள், நன்கொடையாளர்கள், பரிந்துரையாளர்கள், ஊடக ஆதரவாளர்கள் ஆகியோருக்கும் சிறப்புச்செய்யப்பட்டன. இதில், தமிழ் ஊடகங்களிலே தமிழ் மலர் மட்டுமே இந்நிகழ்ச்சியின் ஊடக ஆதரவாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, சமூகப்பணியில் தன்னார்வளராக மக்கள் ஈடுபடுவது, தன்னை மட்டுமல்லாது நம் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காக இருக்கும் என்பதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளே சான்றாகிறது.