நம்பிக்கையில்லா தீர்மானத்தை முடிந்தால் கொண்டு வாருங்கள்!
இஸ்கண்டார் புத்ரி, ஜன. 12 –
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பினால், மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடப்படுகிறது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் வாய்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், ஓராண்டு காலமாக எதிர்க்கட்சியினர் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்று அன்வார் தெரிவித்தார்.
“(நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்காக) நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றோம். ஓராண்டு கடந்து விட்டது. ஒவ்வொரு நாளும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆதலால், சொல்வதற்கு எங்களுக்கு எதுவும் இல்லை.
“தங்களின் ஆதரவாளர்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களிடம் பொய்யைப் பரப்பி வருவதைத் தவிர்த்து, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சத்தியபிரமான வாக்குமூலத்தை (மக்களைவில்) தாக்கல் செய்ய அவர்களுக்குப் போதுமான வலிமை இருக்கிறது என்று நான் கருதவில்லை.
“நான் மாறுபட்ட எண்ணத்தைக் கொண்டிருப்பவன். மாற்றங்களைக் கொண்டுவர முடியவில்லை என்றால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியதுதானே. இறுதியில் மக்களே முடிவு செய்வார்கள்” என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கூறினார்.
ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் நேற்று, தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுக ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது நிதி அமைச்சருமான அன்வார் இதனைத் தெரிவித்தார்.
ஒரு பிரதமருக்கான ஆதரவை சோதித்துப் பார்க்க விரும்பினால், சத்தியப்பிரமான வாக்குமூலம் அடிப்படையில் இல்லாமல், மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து அதன் மூலமே முடிவு செய்யப்பட வேண்டும் என்று, பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் நேற்றுமுன்தினம் செய்திருந்த பரிந்துரை குறித்து கருத்துரைக்கும்போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக கிட்டதட்ட 120 சத்தியப்பிரமான வாக்குமூலங்களை எதிர்க்கட்சியினர் பெற்றிருப்பதாக, இணையத்தள எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் கூறியிருப்பது குறித்து ஹசான் அவ்வாறு கூறியிருந்தார்.
ஹசான் தெரிவித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானக் கருத்தை, எதிர்க்கட்சிகள் அவசியம் பின்பற்ற வேண்டியதுதான் சிறந்த நடவடிக்கை என்று அன்வார் மேலும் தெரிவித்தார்.
“அக்கருத்து மிகவும் பொறுத்தமானது. காரணம், அந்த நகர்வு… இந்த நகர்வு… கடைசியாக “துபாய் நகர்வு” என்று ஒவ்வொரு நாளும் ஒரு நகர்வை மக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். அரசியல் முதலைத் தொலைத்து விட்டவர்கள் மத்தியில், இவையெல்லாம் அவசர அரசியல் விளையாட்டுகள் என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது.
“இதனைத் தொடர்ந்து, (இனி எந்த ஒரு நகர்வையும் பொருட்படுத்தாமல்), நாட்டை மேம்படுத்துவது மீது கவனம் செலுத்துமாறு அமைச்சரவைக்கும் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நான் அறிவுறுத்தி இருக்கின்றேன். 2024-ஆம் ஆண்டில் எங்களின் கவனமெல்லாம், நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாடு மீதுதான்” என்று அன்வார் தெரிவித்தார்.