நெருங்கி வரும் பொங்கல் விலை உயரும் காய்கறிகள்

தெலுக் இந்தான், ஜன. 12-
இன்னும் ஓரிரு நாள்களில் பொங்கல் பண்டிகை மலேசியத் தமிழர்களால் கொண்டாடப்படும் வேளையில், காய்கறி மற்றும் பொங்கலுக்கு பயன்படுத்தும் வெத்தலை வள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் கருணைக் கிழங்கு வகைகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் கிலோவுக்கு சராசரி ரிம5.00 அதிகரித்துள்ளது என தெலுக் இந்தான் பெரிய சந்தையில் உள்ள காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.


இங்குள்ள வணிக மையங்களில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது என்றாலும், காய்கறி மற்றும் இந்தியாவின் பெரிய வெங்காயம் விலை திடீரென உயர்ந்துள்ளது குறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆர்வம் காட்டினாலும், பொருள்கள் விலை அதிகரிப்பினால் அனைவரையும் யோசிக்கவைத்துள்ளது என்றும் தெரிவித்தனர்.


தைப்பொங்கலில் காய்கறிகளே முக்கியப்பங்கு வகிக்கின்றது. அதே வேளையில் சந்தையில் தேவையான அளவுக்கு தினமும் காய்கறிகள் லோரிகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், காரக் கருணைக்கிழங்கு கிலோவுக்கு ரிம.15.00, சிறு கிழங்கு கிலோவுக்கு ரிம.12.00, வெத்தலை வள்ளிக்கிழங்கு கிலோவுக்கு ரிம15.00, பெரிய வெங்காயம் (இந்தியா) கிலோவுக்கு ரிம. 8.00, நாட்டுக் கத்தரிக்காய் கிலோவுக்கு ரிம. 10.00ஆகவும் விற்கப்படுகின்றன.


எது எப்படியாகிலும், ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரிய பண்டிகையாக தைப்பொங்கல் கருதப்படுகிறது. அதனால் மலேசிய தமிழர்கள் இல்லங்களில் குதூகலமாகக் கொண்டாடவே செய்கின்றனர்.
இந்நிலையில், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் நிலையில், பொங்கல் வைக்க தேவையான பொருள்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் கட்டுகின்றனர் என்றும் வணிகர்கள் குறிப்பிட்டனர்.