லஞ்ச ஊழல் விசாரணையில் முன்னாள் தலைவர்கள் “குறி”வைக்கப்படவில்லை
இஸ்கண்டார் புத்ரி, ஜன. 12 –
லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் எந்த ஒரு முன்னாள் தலைவர் மீதும் பிரத்தியேகமாக குறி வைத்திருக்கவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இதற்கு மாறாக, ஒருவரின் அந்தஸ்து மற்றும் பதவியைப் பார்க்காமல், லஞ்ச ஊழலைத் துடைத் தொழிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கடமையைத்தான் எம்ஏசிசி ஆற்றி வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.
“அது எம்ஏசிசியின் பணி. ஆனால், இதை (லஞ்ச ஊழல்) ஒரு சிறு பிரச்சினையாக யாரும் கருதிவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். பழையதோ புதியதோ அனைத்தும் விசாரிக்கப்படும்.
“தவறு புரிந்திருக்கவில்லையென்றால், கவலைப்படத் தேவையில்லை. காரணம், விசாரணை முழுமையாக நடத்தப்படும். வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே குற்றம் சுமத்தப்படும்.
“எனினும், குறிப்பிட்ட சிலர் மீது மட்டுமே எம்ஏசிசி விசாரணையை மேற்கொள்ளும் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். காரணம், யாராவது அல்லது பெரிய “சுறாக்கள்” தப்பித்து விடுவார்கள் என்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும்.
“முன்னாள் தலைவர்களைப் பிடிப்பதன் மூலம் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்கின்றேன் என்று யாரும் கருத்திவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன்” என்று நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் நேற்று, தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுக ஊழியர்களுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு பிறகு, லஞ்ச ஊழல் தொடர்பில், பெரிய அந்தஸ்தில் இருப்போர் அல்லது “சுறாக்கள்” மீதும் விசாரணைகள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னாள் நிதி அமைச்சர் துன் டாய்ம் ஸைனுடினுக்கு எதிரான விசாரணைக்கு உதவுவதற்காக, எம்ஏசிசி நால்வரை அழைத்திருப்பதாக, இம்மாதம் 4-ஆம் தேதி கூறப்பட்டது.
அரசாங்கத்தில் சேர்வதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர் என்று அழைக்கப்படும் அளவுக்கு வர்த்தகத்தில் வளர்ச்சிக் கண்டிருந்த தமது கணவர் டாய்மிற்கு எதிராக அநியாயம் இழைக்கப்படுவதாக அவரின் மனைவி தோ புவான் நைமா காலிட் கூறியதாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை கூறப்பட்டது.
எம்ஏசிசி விசாரணையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக நைமாவும் அவரின் இரண்டு மகன்களும் நேற்றுமுன்தினம் காலையில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வந்திருந்தனர்.
கோலாலம்பூரில் உள்ள மெனாரா இல்ஹாம் சோதனையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
தனது விசாரணையில் ஓர் அங்கமாக, டாய்ம் குடும்பத்திற்குச் சொந்தமான மெனாரா இல்ஹாமை எம்ஏசிசி கடந்த மாதத்தில் கைப்பற்றியது.
பண்டோரா பேப்பர்ஸிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் நடப்புச் சட்டத்தின் அடிப்படையில், டைய்மிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இதற்கு முன்னர் எம்ஏசிசி கூறியிருந்தது.