நாட்டில் 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனரா?ஆதாரத்தைக் காட்டுங்கள்

கோலாலம்பூர், ஜன. 12 –
நாட்டில் வேலையில்லாத ஐந்து லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறுவோர், அதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்று, மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கோரியுள்ளார்.

சட்டப்பூர்வமாக வேலையில் அமர்த்தப்படாத ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாக, மலேசிய தனியார் தொழிலாளர் நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் தலைமைச் செயலாளர் சுகுமாரன் நாயர் கூறியதாக கடந்த திங்கட்கிழமை பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்பில் தகவல்களைப் பெற்றால், தமது அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று, கோலாலம்பூரில் உள்ள விஸ்மா கியூபெக்ஸிற்கு நேற்று வருகை புரிந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய சிம் தெரிவித்தார்.

“ஆதாரங்களும் அவற்றில் உண்மையும் இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஏதுவாக, ஓர் அதிகாரப்பூர்வ புகாரை செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.

“இதுபோன்று கூறுவோர் எங்களுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். ஆதாரங்களைப் பெறுவதற்காக நாங்கள் எப்போதும் தயாராகவும் இருக்கின்றோம்” என்று சிம் தெரிவித்தார்.

ஜொகூரில் 171 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டதன் வழி, வேலைகள் தயாராக இல்லாத பட்சத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் சம்பவம் அம்பலத்திற்கு வந்தது.

வாக்குறுதி அளிக்கப்பட்டதுபோல், வேலை கிடைக்கவில்லை என்று கூறி, அந்த 171 வங்காளதேசிகளும், தங்களின் ஏஜெண்டுகளுக்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்காக ஜொகூரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.

அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் இது போன்று நடத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த தமது அமைச்சு கொள்கைகளை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக சிம் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நடப்பு சட்ட திட்டங்களை மேம்படுத்தவும் புதிய விதிமுறைகளை சரிபார்க்கவும், இம்மாதம் 16-ஆம் தேதி உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை தாம் சந்திக்க விருப்பதாக அவர் தெரிவித்தார்.