பத்துமலைத் தைப்பூசத்திற்கு கேடிஎம்மின் இரண்டு நாள் இலவச ரயில் சேவை!
பத்துமலைத் தைப்பூசத்தை முன்னிட்டு, கேடிஎம் பயணிகளுக்கு இரண்டு நாட்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படவிருக்கிறது.
தைப்பூசத்தின் முதல் நாளான 24-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரையில் இரண்டு நாட்களுக்கு மக்கள் இந்த இலவச சேவையை அனுபவிக்கலாம் என்று, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் நேற்று அறிவித்துள்ளார்.
அதேவேளையில், பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு கேடிஎம்மின் சேவை, 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் 24 மணி நேரத்திற்கு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இச்சேவை பத்துமலை-பூலாவ் செபாங்-பத்துமலை மற்றும் பத்துமலை-கோலக் கிள்ளான்-பத்துமலைக்கு இடையில் மேற்கொள்ளப்படும் என்றும் பயண நேரமும் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் லோக் கூறியுள்ளார்.
இதனை முன்னிட்டு மொத்தம் 28 கேடிஎம் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்பதுடன் இவ்வாண்டில் கூடுதலாக 72 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்துமலை-பூலாவ் செபாங்-பத்துமலைத் தடச் சேவையில் 33 ரயில்களும் பத்துமலை-கோலக் கிள்ளான்-பத்துமலைத் தடச் சேவையில் 39 ரயில்களும் ஈடுபடுத்தப்பட விருக்கின்றன.
புலாவ் செபாங்கிலிருந்து பத்துமலைக்கான கூடுதல் ரயில் சேவை, இம்மாதம் 23-ஆம் தேதி, இரவு 9.55 மணிக்குத் தொடங்கும். இத்தடச் சேவை ஒரு மணிக்கு ஒரு ரயில் என்ற வகையில் மேற்கொள்ளப்படும்.
கோலக் கிள்ளான் நிலையத்திலிருந்து பத்துமலைக்கான கூடுதல் ரயில் சேவை 23-ஆம் தேதி இரவு 11.39 மணிக்குத் தொடங்கும்.
“கோலக் கிள்ளானைச் சேர்ந்த மக்கள், அன்றைய தினம் நள்ளிரவுக்குப் பின்னர் பத்துமலைக்கான ஒரு நேரடி ரயில் சேவையை அனுபவிக்கலாம்” என்று லோக் தெரிவித்தார்.
அதோடு, கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ரயில் பயணிகள் 25-ஆம் தேதி இலவச ரயில் சேவையை அனுபவிக்கலாம் என்று கூறிய லோக், இந்த சமயத்தில் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் இந்த இலவச சேவையை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
வரும் 24 முதல் 26-ஆம் தேதிகளுக்கிடையில், வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை இலகுவாக்குவதற்காக, மின்னியல் ரயில் நிலையங்களுக்காக (இடிஎஸ்) கூடுதல் ரயில் சேவைகளும் மேற்கொள்ளப்பட விருக்கின்றன.
பினாங்கின் பட்டர்வொர்த்-கேஎல் சென்ட்ரல்-பட்டர்வொர்த் சேவைக்கான இரண்டு பயணங்களும் இவற்றில் அடங்கும். மேலும் இரண்டு பயணங்கள் பெர்லிஸின் பாடாங் பெசார்-கோலாலம்பூர்-பாடாங் பெசார் தடச் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கேடிஎம் ரயிலைத் தவிர்த்து, 24 முதல் 25-ஆம் தேதி வரையில் கோலாலம்பூரிலும் பினாங்கிலும் இலவச ரெப்பிட்கேஎல் பஸ் சேவைகளையும் மக்கள் அனுபவிக்கலாம்.