பள்ளி பஸ் கட்டணம்மார்ச்சில் உயர்த்தப்படுகிறது!

வரும் மார்ச் மாதம் முதல், 2024/2025-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை காலகட்டத்தில் பள்ளி பஸ் கட்டணம் உயர்த்தப்பட விருக்கிறது.

அதை எதிர்கொள்ள, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று, மலேசிய பள்ளி பஸ் சங்கச் சம்மேளனத் தலைவர் அமாலி முனிஃப் ரஹ்மாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடத்தைப் பொறுத்து 10 முதல் 20 வெள்ளி வரையில் அந்த உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வரும் ஜூலை மாதம் முதல் பஸ் ஓட்டுநர்களுக்கு மாதச் சம்பளமாக 1.500 வெள்ளி வழங்கப்பட வேண்டிய உத்தரவு அமல்படுத்தப்பட விருப்பதைத் தொடர்ந்து, இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு, ரிங்கிட்டின் மதிப்பு சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் உபரி பாகங்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதும் இதற்கு மற்றொரு காரணம் என்று அமாலி தெரிவித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பள்ளி பஸ் கட்டணம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. இதனால் அச்சேவைக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரே நிர்ணயித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மார்ச் மாதம் அமல்படுத்தப்படவுள்ள 10 முதல் 20 வெள்ளி வரைக்குமான கட்டண உயர்வு இன்னமும் குறைவானதாகவே இருப்பதாகக் கூறிய அமாலி, ஒரு மாதத்தில் ஒரு பள்ளி பஸ் மொத்தம் 44 தடவை மாணவர்களை ஏற்ற வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.