மலேசிய இந்தியர்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்புவதா?மகாதீரின் மடமைக்கு அளவே இல்லையா?


மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு மோசமான அரசியல் பேர்வழியாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இருப்பது, மலேசியாவுக்கே ஓர் அவமானச் சின்னம் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் காட்டமாகக் கூறினார்.


தமிழ் நாட்டின் தந்தி தொலைக்காட்சிக்கு துன் மகாதீர் வழங்கியிருக்கும் பேட்டி, ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களையும் சிறுமைப்படுத்தியிருக்கிறது.
நாட்டை வளமாக்க காடு, மேட்டை சீர்படுத்தி களைந்து மலையகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்தியவர்களுள் மலேசிய இந்தியர்களுக்கு முதன்மை இடம் உண்டு.
எத்தனையோ இன்னல்களை எதிர்நோக்கி ரத்தத்தை வியர்வையாக்கி இந்த நாட்டை செப்பனிட்டு வளப்படுத்திய இனம் இந்தியர் என்பதை துன் மகாதீர் மறந்திருக்கலாம். வரலாறு மறக்காது என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.


காலம் கடந்தாவது புத்திக்கூர்மை வேண்டும். அதன் மூலம் அறிவுப் பெட்டகமாக சிந்தனை சக்தியாக ஒரு மனிதன் உருவாக வேண்டும். ஆனால் அந்த சிந்தனை எல்லாம் சுருங்கச் செய்து எதை எதையோ உளறிக் கொண்டிருக்கும் மகாதீரின் புத்தி பேதலிப்பு கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதேவேளையில் கண்டிக்காமலும் இருக்க முடியாது.


மலேசிய இந்தியர்கள் இந்நாட்டு விசுவாசிகள் என்பதை யாரும் புதிதாக எழுதிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டுக்கு 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் கால்பதித்து தங்கள் உழைப்பால் உயர்ந்து இன்னமும் மலேசியாதான் எங்கள் தாய் நாடு என்று தரணி புகழ் பாடி வருகின்றனர்.
அத்தகைய இந்திய சமுதாயத்தை தமிழ் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் விசுவாசமற்றவர்கள் என்று மகாதீர் அறிவிலித்தனமாகப் பேசுவது முறைதானா? இந்தியர்கள் தமிழ் நாட்டில் இருந்து மலாயா நாட்டுக்கு வந்தது முதல் இங்கேதான் தாயும் தந்தையுமாய் ஒன்றெனக் கலந்து உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சமுதாயத்தை கேள்வி எழுப்பி, சிறுமைப்படுத்தி, காயப்படுத்தி, வேதனைப்படுத்த துன் மகாதீருக்கு எப்படி மனம் வந்தது.


அரசியலில் செல்லாக்காசாகி விட்ட பின்பும் ஓர் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை மகாதீர் கேவலப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லை.மலேசியாவில் 23 ஆண்டு காலமும் அதன் பின்னர் 22 மாதங்களும் பிரதமர் எனும் அதிகாரத்தில் இருப்பதற்கு இந்திய சமுதாயம் போட்ட பிச்சைதான் அவர் வகித்த பிரதமர் பதவி என்பதை மறுக்க முடியுமா?
இந்தியர்களுக்கு மகாதீர் எதுவுமே செய்யவில்லை என்று மறுக்க முடியாது. ஆனால் இத்தனை ஆண்டுகாலம் பதவியில் இருந்த அவருக்கு, இந்தியர்கள் கொடுத்த ஆதரவை அவர் மறந்திருக்க முடியாது.


அவர் காலத்தில் எத்தனையோ இந்தியர்கள் குடியுரிமையற்றவர்களாகவும் நாடற்றவர்களாகவும் இருந்தும் கூட அவர்கள்தான் அவருக்கு வாக்களித்து பிரதமர் எனும் அரியாசனத்தில் அமர வைத்தார்கள். அந்த நன்றியைக்கூட மறந்துவிட்ட மகாதீருக்கு இந்திய சமுதாயத்தைப்பற்றி இனியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.இந்திய நாடுதான் மலேசிய இந்தியர்களுக்கு விசுவாசமாகத் தெரிகிறது என்று பேசுவதும் ஒரு மடமைதான். மகாதீரின் வாய்ச் சவடால் எல்லாம் இங்கு எடுபடாது. அவர் இனிமேல் அரசியல் துறவறம் பூணுவதுதான் நல்லது என்று ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.