சாதனைப் பெண்கள் பட்டியலில் அம்பிகா உள்பட மூன்று மலேசியர்கள்

கோலாலம்பூர், ஜன. 18-
ஃபோர்ப்ஸ்” பிரபல அனைத்துலக சஞ்சிகை நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள “ஐம்பதுக்கு மேல் ஐம்பது: ஆசியா 2024” எனும் முன்னுதாரணப் பெண்களின் பட்டியலில் மூன்று மலேசியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏபெக் எனப்படும் ஆசியா- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புச் செயலகத்தின் நிர்வாக இயக்குநர் ரெபேக்கா ஃபாத்திமா ஸ்டா மரியா, வழக்கறிஞரும் இயக்கவாதியுமான அம்பிகா ஸ்ரீனிவாசன், திரைப்பட இயக்குநரும் “கரண்ட் பிக்சர்ஸ்” படத் தயாரிப்பு நிறுவனத்தின் தோற்றுநருமான துங்கு மோனா ரிஸா காலிட் ஆகியோரே அவர்கள் ஆவர்.

ஆசியா- பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட ஐம்பது சாதனைப் பெண்கள் இப்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் மோஸ்தர்( ஃபேஷன்), மருந்துத் தயாரிப்பு, நிதி உள்ளிட்ட இருபத்து நான்கு துறைகளில் தன்னிகரற்ற நிலையில் சிறந்து விளங்கும் 14 நாடுகள், பிரதேசங்களிடமிருந்து ஐம்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டது.

அறுபத்தைந்து வயதான ஸ்டா மரியா, கடந்த 2019ஆம் ஆண்டில் ஏபெக் செயலகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இருபத்தோரு உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கங்களுக்கு இடையிலான அந்தப் பொருளாதார ஆலோசனை மன்றத்திற்குத் தலைமையேற்ற முதல் பெண்மணி எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

அறுபத்தேழு வயதான அம்பிகா, மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும் மனித உரிமை இயக்கவாதியும் ஆவார். ரூத் பேடர் கௌரவ விருதையும் காந்தி நினைவுநிதி பொதுச்சேவை விருதையும் அவர் வென்றுள்ளார். மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் இரண்டாவது பெண் தலைவர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. சுத்த சுமாஜத்தின் தலைவராகவும் அவர் சேவையாற்றி வருகிறார். எண்ணற்ற இதர பல இயக்கங்கள் வாயிலாகவும் அவர் சேவையாற்றி வந்துள்ளார்.
ஐம்பத்தேழு வயதான துங்கு மோனா ரிஸா, கடந்தாண்டில் வெளிவந்த “ரெயின் டவுன்” எனும் சீனப் படத்தின் இயக்குநர் ஆவார். மலேசியாவில் சீன மொழிப் படத்தை இயக்கிய முதலாவது மலாய்ப் பெண்மணி ஆவார். அப்படம் கடந்தாண்டு கனடாவின் வான்கூவர் ஆசிய திரைப்பட விழாவிலும் கோவா நகரில் இந்தியத் திரைப்பட விழாவிலும் அது திரையிடப்பட்டது. இவ்வாண்டு பிப்ரவரியில் மலேசியாவில் அது திரையிடப்படுகிறது.