தமிழ் மலரின் ஒற்றுமை பொங்கல்

கோலாலம்பூர், ஜன.18-
2024 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் மலர், ஓம்ஸ் அறவாரியத்தின் இணை ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் தமிழ் மலர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.


நாதஸ்வரம் மேளம் முழங்க மூன்று பானைகளில் பொங்கல் வைத்து தை மகளை வரவேற்று ஒற்றுமைப் பொங்கலைத் தமிழ் மலர் கொண்டாடியது.
பொங்கல் பொங்கி வந்த வேளையில், பொங்கலோ பொங்கல் என அனைவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ச்சியடைந்தது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.
வாழ்வும் வளமும் சிறக்க இறைவனை மறவாது பிரார்த்தனை செய்து ஆசி பெற்று தமிழ் மலர் மென் மேலும் உயர அனைவரும் வாழ்த்தினர்.

தமிழ் மலர் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நிகழ்ச்சியைச் சிறப்பாக செய்து வருகின்றது. ஒற்றுமைத் துறை அமைச்சின் சார்பாக நேற்று முன்தினம் ஒற்றுமை பங்காளிகள் நிகழ்ச்சியில் தமிழ் மலர் பத்திரிகைக்கு ஒருமைப்பாட்டிற்கான பங்காளிகள் என அங்கீகாரமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழ் மலர் நாட்டு மக்களுக்கும் சமுதாயத்திற்கும் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது இந்திய சமுதாயத்தை உயர்த்தும் வகையில் மித்ரா ஒற்றுமை துறையின் கீழ் இயங்குவதால் அந்த பொறுப்பு எனக்கும் வந்துள்ளது. ஒற்றுமை துறை அமைச்சில் இந்த ஆண்டிற்கான கொள்கையாக எதிர்காலத்திற்கான புதிய பாணியில் வரையறையும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒற்றுமை துறையின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

ஓம்ஸ் பா.தியாகராஜன் –
இவ்வாண்டு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது ஆசிரியர்களோடு அவரும் ஒன்றிணைந்து செயலாற்றி தமிழ் மலர் தற்போது நல்ல நிலைமையில் இருப்பதற்காக தமிழ் மலர் தலைமை ஆசிரியர் கு.தேவேந்திரனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்முடைய பத்திரிகை மக்களுக்கு நல்ல உண்மையான செய்திகளையும் தகவல்களையும் கொடுத்து வருகின்றது என்று சொல்லலாம்.
தமிழ் மலர் நாளிதழ்தான் உண்மையும் சொல்லும் பல அடிகளையையும் வாங்கும். ஒரு முறை அல்ல பல முறை உண்மையைச் சொன்னதற்காக பல அடிகளை வாங்கி உள்ளது. இந்த அடிகள் இன்னும் தொடரும். அடி வாங்கினால் தான் நாம் உண்மையான பத்திரிகை என்று சொல்ல முடியும்.
இன்னும் பல முறை அடி வாங்கவும் தயாராக இருக்கிறோம். தமிழ் மலர் ஆதரவாளர்கள் அனைவரும் இன்று போல என்றும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

டத்தோ பஞ்சமூர்த்தி –
வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தைரியமாகவும் துணிச்சலாகவும் கருத்து சொல்வது ஓம்ஸ் பா.தியாகராஜன் தான். சமுதாயத்தில் ஒரு பிரச்சினை எழும் போது அதனைப் பற்றி கருத்து சொல்வது அவர் தான். மலேசியாவில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் தமிழ் மலருக்கும் ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


டத்தோ முருகேசன் –
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதே போல, இந்த ஒற்றுமை பொங்கல் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய ஒற்றுமை துறை துணை அமைச்சராக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இருக்கும் வேளையில் மித்ராவும் அவரின் கீழ் செயல்படுகிறது. அந்த அடிப்படையில் இந்தப் பொங்கல் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்.


இந்நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமைத் துறையின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், டத்தோ எஸ்.எம் பெரியசாமி, மலேசிய அனைத்துலக அம்பேத்கார் இயக்கத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி, அரிமா எனப்படும் மலேசிய சமூக நல மறுமலர்ச்சி இயக்கச் செயலாளர் டத்தோ முருகேசன், தமிழ் மலர் தலைமை ஆசிரியர் கு.தேவேந்திரன், தமிழ் மலர் ஆதரவாளர்கள் தமிழ் மலர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் பா.தியாகராஜன், டத்தோ எஸ்.எம் பெரியசாமி, டத்தோ பஞ்சா மூர்த்தி, டத்தோ முருகேசன் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள அஜுந்தாஸ் ஏற்பாட்டில் தமிழ் மலர் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதனை ஓம்ஸ் பா.தியாகராஜன் எடுத்து வழங்கினார்.அதோடு, வருகை புரிந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.