பாலஸ்தீனத்திற்கு ஐநாவில் முழுஉறுப்பியம் தேவை அன்வாரும் அமைச்சர்களும் சிறப்பு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்

கோலாலம்பூர், ஜன. 18-
ஐக்கிய நாடுகள் சபையின் ( ஐநா) தலைமைச் செயலாளர் அண்டோனியோ கட்டாரெஸூக்கு முகவரியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டைகளில் (போஸ்ட் கார்டு) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இதர அமைச்சர்களும் நேற்று கையெழுத்திட்டனர்.


அனைத்துலக அமைப்பான ஐநாவில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் எனும் மலேசியர்களின் விருப்பத்தைப் புலப்படுத்தும் வகையிலும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டுவரும் வன்கொடுமையை உடனடியாக நிறுத்தக் கோரியும் அந்த அஞ்சல் அட்டைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தமது முகநூல் பதிவில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறப்பு அஞ்சல் அட்டைகள் ஐநாவுக்கான மலேசியாவின் நிரந்தர பிரதிநிதி வாயிலாக ஒப்படைக்கப்படும். மலேசியர்களின் இந்த உளப்பூர்வமான கோரிக்கையை தலைமைச் செயலாளர் கட்டரெஸ் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என்று அன்வார் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.


இந்த இயக்கத்தில் மலேசியர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளலாம். இன்று தொடங்கி சிறப்பு அஞ்சல் அட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. அவற்றை ஐ.நா. தலைமைச் செயலாளருக்கு அவர்கள் அனுப்பி வைக்கலாம் என்றும் அன்வார் கூறினார்.


பாலஸ்தீன நாட்டை முழுஉறுப்பினராக ஐநா ஏற்றுக் கொள்ள வேண்டும். போர்நிறுத்தம் இப்போதே நடப்புக்கு வரnண்டும் என்று குறிப்பிடப்பட்ட அஞ்சல் அட்டைகளில் அன்வாரும் இதர அமைச்சர்களும் நேற்று கையெழுத்திட்டனர் என்று தொடர்புத்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனம் தற்போது ஐநாவில் ஒரு கண்காணிப்பு உறுப்பினராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அந்தஸ்து கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர்12 தேதியன்று ஐநா பொதுப்பேரவையால் வழங்கப்பட்டது.இந்த அஞ்சல் அட்டைகளைத் தலா இரண்டு வெள்ளிக்கு அனைத்து தபால் நிலையங்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.