பிப்ரவரி முதல் தேதியன்று தொடங்கி புதிய குடிநீர்க் கட்டணம் அமலாகிறது

கோலாலம்பூர், ஜன. 18-
தீபகற்ப மலேசியாவிலும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்திலும் பிப்ரவரி முதல் தேதியன்று வீடுகளுக்கான குடிநீர்க் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒரு கனமீட்டர் நீருக்கு 22 காசு உயர்த்தப்படவுள்ளது என்று தேசிய நீர்ச்சேவை ஆணையம்
( ஸ்பான்) நேற்று தெரிவித்தது.


கட்டண நிர்ணய வழிமுறை (டிஎஸ்எம்) திட்டத்தின்கீழ் இந்தக் கட்டண சீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையொன்றின்வழி அது கூறியது.
கட்டண உயர்வு இன்னும் குறைவான ஒன்றாகவே இருக்கிறது. 2022ஆம் ஆண்டின் பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு கனமீட்டர் நீருக்கு 1.75 வெள்ளி கட்டணம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இது மிகக் குறைவாகும் என்று அது தெரிவித்தது.


புதியக் கட்டண உயர்வால் மாதாந்திரக் குடிநீர்க் கட்டண பில்லில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கு பயனாளிகளுக்கு இலக்கிடப்பட்ட உதவியைத் தொடர்ந்து வழங்கி வரும்படி மாநில குடிநீர் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஸ்பான் குறிப்பிட்டது.


குடிநீர்க் கட்டணத்தை உயர்த்துவது ஓர் அவசியமான நடவடிக்கையாகும். இதனைத் தள்ளி வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் குடிநீர்ச் சேவைத்துறை பிற்காலத்தில் பாதிப்பை எதிர்நோக்க வேண்டிவரலாம் என்று அந்த அறிக்கை கூறியது.
சேவைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் பயனாளிகளுக்குத் தரமான குடிநீர் கிடைப்பதை குடிநீர் விநியோக நிறுவனங்கள் உறுதிப்படுத்த முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.