மித்ரா நிதியுதவியுடன் பகாங்கில் இலவசப் பேச்சுக்கலைப் பயிலரங்கம்!

கடந்த ஆண்டு மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தால் தொடக்கி வைக்கப்பட்ட தேசிய அளவிலான பேச்சுக்கலைப் பயிலரங்கு, இவ்வாண்டு ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மித்ராவின் நிதி ஆதரவுடன் மீண்டும் பகாங் மாநிலம் முழுக்க 5 மாவட்டங்களில் தமிழ் மற்றும் மலாய் மொழிகளில் நடத்தப்படுவதாக மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சு.சுரேந்திரன் தெரிவித்தார்.
இப்பட்டறை முதற்கட்டமாகத் தெமர்லோ மாவட்டத்தின் மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்டது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் பேச்சாற்றலை மேம்படுத்தும் திறன், தமிழ், மலாய் மொழி பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் போது மேற்கொள்ள வேண்டிய திறன் என இப்பட்டறை பகாங் மாநிலக் கல்வி இலாகாவின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.


இதே வேளையில் ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் முறைமையும் நடுவர்களுக்கான பயிற்சிகளும், போட்டிக்கான உரைப்படிவம் எழுதும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. தமிழ், மலாய் மொழிகளில் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சரளமாகப் பேசவும் போட்டிகளில் பங்கேற்கவும் இம்மாதிரியான பட்டறைகள் வழிவகுக்கும் என மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சு.சுரேந்திரன் தெரிவித்தார்.


மேலும் இப்பயிலரங்கம் தெமர்லோ, ரவுப், குவாந்தான், பெந்தோங், கேமரன்மலை என 5 மாவட்டங்களில் தலா 40 பேர் என 200 பேருக்கு எந்தவொரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு கல்வி அமைச்சால் நடத்தப்படவிருக்கும் செந்தமிழ் விழாவில் பகாங் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் மாணவர்களின் படைப்பு இது நாள் வரையில் இல்லாத அளவிற்குத் தனித்துவமாகவும், சிறப்பாகவும் இருக்க இப்பயிலரங்கம் பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.


பகாங் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் இப்பயிலரங்கை நடத்த தமிழ்ப்பள்ளிகள் முன்வந்தால், முழுவதும் இலவசமாக இப்பயிலரங்கை நடத்த மித்ரா போதுமான நிதியுதவியை வழங்கியிருப்பதால் தமிழ்ப்பள்ளிகள் தாராளமாக 0122443010 எனும் எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிலரங்கை நடத்துவதற்கான அனுமதியை பகாங் மாநில கல்வி இலாகா வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.