மூன்றாவது மலேசிய இந்திய ஆக்கப்பூர்வ விருது (மீக்கா 3.0)

பெட்டாலிங் ஜெயா, ஜன. 18 –
வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1இல் நடைப்பெறவிருக்கும் மூன்றாவது மலேசிய இந்திய ஆக்கப்பூர்வ விருது வழங்கும் விழாவை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு பெட்டாலிங் ஜெயா, எல்எப்எஸ் ஸ்டேட்டில் நடைப்பெற்றது.
இச்செய்தியாளர் சந்திப்பிற்குச் சிறப்பு வருகையாளர்களாகப் பினாஸ் குழுமத் தலைவர் டத்தோ அஸ்மீர், சிகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், தாமரை நகைக் கடையின் இயக்குநர் டாக்டர் கணேஷ் லோகநாதன், டத்தோ சற்குணன், மிக்கா தோற்றுநரும் தலைவருமான ஆர்.ஜி நாயுடு, இந்தியப் பிரதிநிதியாக சத்யா, நைன்ஸ்கிரீன் பிரதிநிதி திலகேஸ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


ஒவ்வொரு கலைஞரையும் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொருவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள விருதாக இவ்விருது விளங்குகிறது. உள்ளூர் கலைஞர்களையும் ஊடக கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக இடம்பெறும் இந்த விருது விழா பெரிதும் போற்றதற்குரியதாகும்.


தொடர்ந்து, மிக்கா தோற்றுநரும் தலைவருமான ஆர்.ஜி. நாயுடு பேசுகையில், 2016 முதல் தொடர்ந்து உதவிகரம் வழங்கிவரும் தொழில்நுட்பத் துறை அமைச்சுக்குத் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
தன்னலமின்றி திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கும் இந்த விருதுக்குத் தனி மதிப்பு உண்டு. மலேசிய உள்ளூர் கலைஞர்களை அங்கீகரிக்கும் நோக்கில் உருவான மீக்கா விருது, 13 அரசு சாரா இயக்கங்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
மேலும், மூன்றாவது முறையாக மீக்கா விருது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 23 திரைப்படங்களில் பத்து படங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. கோவிட்19 தொற்றிநால் இவ்விழா நடைபெறாததால் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களும் இவ்விருதில் இடம்பெற்றுள்ளன.


இவ்விருது விழாவில், மக்கள் தங்களுக்கு விருப்பமான உள்ளூர் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஆர்வமாகவும் பெரும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த விருதுகளில், தேர்தெடுக்கப்பட்ட ஐந்து முக்கிய திரைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படும். அதோடு, வாழ்நாள் சாதனை விருதும் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து, தமிழர் கலை, பண்பாடு முக்கியத்துவத்தையும் கலைத்துறையையின் சாதனையையும் பற்றிய கருத்து விளக்கத்தை நாடாளுமன்றத்தில் நெறிப்படத் தொகுத்த சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான யுனேஸ்வரன் பேசுகையில், உள்ளாட்டு கலைஞர்களுக்கு என்றும் கிடைக்க வேண்டியது அங்கீகாரம் என்பதால் அந்த அங்கீகாரம் மீக்கா விருது மூலம் கிடைக்கப்பெறுவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், கலைஞர்களை அங்கிகரிக்க ஃபினாஸோடு கலந்துரையாடியதையும் அவர் தெரிவித்தார்.


மேலும், எப்பொழுதும் இந்தியாவின் பாடலையே தாங்கிக் கொண்டிருப்பதைவிடுத்து மலேசியாவிலும் உள்ளூர் கலைஞர்கள் திறமைசாலிகள் என உணர்த்துவதாக இவ்விழா அமைவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தொலைத்தொடர்பு, தொழில்நுட்ப அமைச்சரான, ஃபாஹ்மி ஃபாட்சில் வருகையளிப்பார் என்பதை உறுதி வழங்கினார்.


மேலும், நாட்டில் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளுக்கு, நமது அடையாளத்தை என்றும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தன் அடையாளத்தையும் மானத்தையும் தக்க வைத்துக்கொள்ள ‘அடையாளம்’ எனும் புத்துணர்ச்சி மிக்க பாடல் ஒன்று இவ்விருது விழாவில் வெளியிடப்படும். கார்த்திக் ஷாமளன் இப்பாடல் இயக்கத்தில் இயக்குநராகவும், இசை டினேஷ் ஜி.கே குமார், வரிகள் ஜேனட் ஜோன் பீட்டர் ஆகியோரால் இப்பாடல் உருவானது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில், நாம் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்களையும் சவால்களையும் பிரதிபலிக்கும் விதமாக இப்பாடல் அமையும்.


மேலும், சிகாமாட் நாடாளூமன்ற உறுப்பினராக இருப்பின் அனைத்து வித பிரச்சனைக்கும் தன்னால் தீர்வுக்கொண்டு வர இயலும் என்பதில் பெரிதும் நம்பிக்கையுள்ளதாகவும் கலைஞர்கள் யாராயிருந்தாலும் அனைவரும் கலைத்துறையில் போற்றபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
வருகைபுரிந்த அனைத்து சிறப்பு வருகையாளர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்வி பதில் அங்கத்தில், அனைத்து விருது விழாக்களிலும் தனக்கென தனித்தன்மையான பாடல்கள் இசைக்கப்படும், அவ்வகையில் மீக்கா 3.0லும் பாடல் உள்ளதையும் அவ்விருதுவிழாவில் அப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.


அதோடு, ஆஸ்ட்ரோவில் ஏப்ரல் மாதம் ஒலிபரப்பப்படுவதால் இவ்வாண்டிலும் மின்னூடகங்கள் இவ்விருது விழாவை நேரடி ஒளிப்பரப்பு செய்ய இயலாது. சின்ன துணுக்குகளையும் நேர்காணல்களையும் வெளியிடலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, 45 விருதுகள் வழங்கப்படுவதாகவும் அதில், வாழ்நாள் சாதனை வகையில் நால்வருக்கும், துறை மேலானோரில் நால்வருக்கும், ஐகோன் விருதுக்கு ஒருவரும், வளர்ந்துவரும் கதாநாயகன், கதாநாயகி எனும் வகைக்கு விருதுகள் வழங்கப்படும் என்றார்.


மக்களின் ஆதரவில் சுமார் 25600 வாக்குகள் நேற்று வரை கிடைக்கப்படிருக்கின்றன. மேலும், அடுத்த வாரம் திரைக்கதைத் தொடர்பான தேர்வுக்கு வாக்குகள் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நாயுடு தெரிவித்தார்.
மேலும், தரமாகவும் முறையாகவும் அரசாங்கத்தின் முழு ஆதரவும் பாதுகாப்பும் கிடைத்து நடைபெறும் விருது விழா என்பதால் உள்ளூர் நடிகர்கள் அதிகளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்றால் மிகையாகாது. ஆனால், சில தயாரிப்பாளர்கள் தங்களின் சில செயலற்ற சிந்தனையால் இன்னுமும் விருது விழாவில் பதிவு செய்யாமல் இருக்கின்றனர் என்று அவர் கூறினார். சிலர் பயம் கொள்கின்றனர். அச்சத்தைத் துடைத்து எதிலும் தைரியமாக செயலில் இறங்க தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறதாக நாயுடு கோரிக்கை விடுத்தார்.