மகாதீருடன் தொடர்பைத் துண்டிக்காவிடில் பெரிக்காத்தானுக்குப் பலத்த அடி கிடைக்கும்

கோலாலம்பூர், ஜன. 18-
டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பெரிக்காத்தான் நேஷனல் தனது தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், வரும் தேர்தலில் மலாய் அல்லாத வாக்காளர்களின் பலத்த பதிலடிக்கு அது இலக்காக நேரிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


இந்தியர்களும் சீனர்களும் மலேசியாவுக்கு முழுவிசுவாசத்துடன் இல்லை என்று முன்னாள் பிரதமருமான மகாதீர் கூறியிருப்பது பெரிக்காத்தான் நேஷனலுக்கு இழப்பையே ஏற்படுத்தும். மகாதீருடனான ஒத்துழைப்பைத் துண்டிக்க மறுத்து இதர இனங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருக்கும் மகாதீருடன் தொடர்ந்து பெரிக்காத்தான் ஒத்ழைக்க முடிவுசெய்தால் அக்கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும் என்று மலாயாப் பல்கலைக்கழக ஆய்வாளரான அவாங் பவி குறிப்பிட்டார்.மகாதீர் இப்போது ஒரு பொறுப்பற்ற நபராகவே கருதப்பட்டு வருகிறார் என்றும் அவர் சொன்னார்.


பாஸ் ஆட்சி செய்துவரும் கிளந்தான், திரெங்கானு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் ஆலோசகர் பதவிக்கு மகாதீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்தியர்களும் சீனர்களும் குடியேறிகள் என்றும் மலேசியாவுக்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் மகாதீர் கூறிருப்பது முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மஸ்லான் அலி கூறினார்.


நாட்டின் அரசியலில் மகாதீருக்கு இப்போது எந்த செல்வாக்கும் இல்லை. அவருடைய தொடர்பைத் துண்டிப்பதால் பெரிக்காத்தானுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.
மகாதீரின் தலைமையிலான அரசியல் கட்சிகள் பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி அல்லது பெரிக்காத்தான் நேஷனல் போன்ற ஏதாவது ஒரு கூட்டணியுடன் கூட்டுச் சேராமல் எந்தவொரு தொகுதியிலும் வெற்றிபெற முடியாது. கடந்த 2022ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மகாதீரின் தலைமையிலான கெராக்கான் தானா ஆயேர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. தாம் போட்டியிட்ட லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் வைப்புத்தொகையைக்கூட அவர் பறிகொடுத்தார் என்றார் மஸ்லான்.