சிங்கையின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர், ஜன. 19-
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது 27 லஞ்சஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று அக்குடியரசின் ஊழல் நடவடிக்கைகள் புலனாய்வுத்துறை ( சிபிஐபி) நேற்று தெரிவித்தது.
சொத்துடைமைத் தொழிலதிபர் ஒங் பெங் செங் என்பவரிடமிருந்து 384, 340.98 சிங்கை டாலர் லஞ்சப்பணம் பெற்றதன் தொடர்பில் கடந்தாண்டு ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். ஒங்கின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு அவரிடமிருந்து ஈஸ்வரன் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் சிபிஐபி புலனாய்வுத்துறை குறிப்பிட்டது.


கால்பந்தாட்டப் போட்டிகள், இசைநிகழ்ச்சிகள், சிங்கை ஃபோர்முலா 1 கிராண்ட் பிரீ கார் பந்தயம் போன்றவற்றைக் காண்பதற்கு இலவச டிக்கெட்டுகளைப் பெற்றது, ஒங்கின் தனிவிமானத்தில் பயணம் மேற்கொண்டது ஆகியவை அந்த ஊழல் நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் மீதான குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தம்மீது அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஈஸ்வரன் மறுத்துள்ளார். தமது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்கப் போவதாகவும் தமது பதவி விலகல் கடிதத்தில் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தைப் பிரதமரின் அலுவலகம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.


குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒரு லட்சம் சிங்கை டாலர் அபராதம் அல்லது ஏழாண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்படும்.
இதனிடையே, இது பற்றி ஒங்கின் அலுவலகம் இன்னும் கருத்துரைக்கவில்லை. லஞ்சஊழல் விசாரணை தொடர்பில் கடந்த ஜூலையில் ஒங்கும் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. லஞ்சஊழலைத் தடுப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அங்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. பல அமைச்சர்களின் சம்பளம் ஆண்டுக்கு பத்து லட்சம் சிங்கை டாலருக்கும் அதிகமாகும்.


அறுபத்தோரு வயதான ஈஸ்வரன் கடந்த 2006ஆம் ஆண்டில் பிரதமர் லீ சியென் லூங்கின் அமைச்சரவையில் இளநிலை அமைச்சராகச் சேர்ந்தார். 2021ஆம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு வர்த்தக மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சுகளுக்கும் அவர் பொறுப்பேற்றிருந்தார். சிங்கப்பூரில் ஆகக் கடைசியாக ஓர் அமைச்சர் லஞ்சஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது 1986ஆம் ஆண்டில் ஆகும். லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் தொடர்பில் விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில், அவர் மரணமடைந்தார்.