டாய்ம் ஸைனுடினுக்கு வெளிநாட்டில் 24கோடி வெள்ளி சொத்துகள் ரகசிய ஆவணத்தில் அம்பலம்
கோலாலம்பூர், ஜன. 19-
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஸைனுடினுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வெளிநாட்டில் கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புடைய சொத்துகள் இருப்பதாக கேய்மன் ஐலண்ட்ஸ் தீவில் உள்ள நிறுவனமொன்று அம்பலப்படுத்தியுள்ளது.
டாய்மின் இதர சொத்துகள் குறித்து மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) தற்போது விசாரணை நடத்திவரும் வேளையில் இந்த விவகாரம் அம்பலமாகி உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் பத்திரிகைப் புலனாய்வு மையம் ( ஐசிஐஜே) எனும் அனைத்துலக அமைப்பு பல ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைக் குவித்து வைத்துள்ள பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் இதர முக்கிய தலைவர்களின் பெயர்களை அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. அதில் டாய்ம் உள்ளிட்ட பல மலேசியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் “பண்டோரா பாக்ஸ்” என அறியப்படுகிறது.
டாய்மின் மனைவி தோ புவான் நைமா காலிட், அவரின் இரண்டு மகன்களான முகமது அமிர் ஸைனுடின், முகமது அமின் ஸைனுடின் ஆகியோர் கேய்மன் தீவில் ஸெஏ டிரஸ்ட் எனும் நிதியகத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆவர். அந்நிறுவனத்திற்கு ஐந்து கோடியே இருபத்தைந்து லட்சம் டாலர் ( 24கோடியே 40 லட்சம் மலேசிய வெள்ளி) மதிப்புடைய சொத்துகள் உள்ளன என்று அத்தீவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜெனசிஸ் டிரஸ்ட் அண்ட் கோர்ப்பரேட் செர்வீசஸ் லிமிடெட் எனும் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கும் அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மலேசியாகினி இணையப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது 2020 வரைக்குமான நிலவரம் ஆகும். டாய்முக்கு வெளிநாடுகளில் இரண்டரை கோடி பவுண்டுகள் ( 14.82 கோடி மலேசிய வெள்ளி) மதிப்புடைய சொத்துகள் மட்டுமே உள்ளன என்று இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.